குப்பைப் பொறுக்கி

முதல் நாள் பெய்த மழையில், தெருவில் ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. சாதாரண நாட்களிலேயே கேட்க வேண்டாம். கொசுவின் அரசாட்சி தான் இருக்கும். மழை நாட்களில் சுத்தமாக சேரிப்பக்கம் டென்ட் கட்டி தங்கிவிடும். 
இன்றும் மழை இருக்கும் என்று டி. வி. யில் சொன்னதாக பெரியாள் மாரி சொன்னது சரிதான் என்று   மயிலாத்தா நினைத்தாள். காலை முதலே, பிசு பிசு வென்று மழை வேறு தூறிக்கொண்டுதான் இருந்தது. நேற்றே  கட்டுமானப் பணி நடக்கவில்லை. நிச்சயமாக இன்றும் வேலை இருக்காது என்று தீர்மானித்துக் கொண்டாள். 
மயிலாத்தா வேலைக்குப் போகிறாளோ  இல்லையோ, சாமிப்பயலுக்கு ஒன்பது மணிக்கெல்லாம் வயிற்றில் அலாரம் அடித்துவிடும். வழக்கமாக எடுத்து வைப்பது போல், முதல் நாள் மீந்து போன சாதத்தில், இரவே தண்ணீரை ஊற்றி, சிறிது உப்பையும் போட்டு சட்டியில் வைத்திருந்தாள். 


காலை நேரத்தில் வீட்டில் சாப்பிட்டால், மதியம் பள்ளியிலயே சாப்பாடு போடுவார்கள். 
” ஏண்டா இஸ்கூலுக்கு நேரமாவல? எங்க இந்த கால நேரத்துல சொல்லாம கொள்ளாம போயிட்டு வர?” 
” எங்கூடப் படிக்குதே, சொர்ணம், அவங்க அம்மா வீட்டு வேல செய்யற வீட்ல, வேண்டாத பழைய நோட்டுங்கள கொடுத்தாங்களாம். அதுல நிறைய எழுதாத பேப்பருங்க இருக்குதுன்னு சொர்ணம் பொண்ணு சொல்லிச்சு. சரி அதுல கொஞ்சம் நானும்தான் எடுத்துக்கலாமேன்னு போயி எடுத்துக்கிட்டு வந்தேன்” 
” போன வாரம் ஆச்சி வீட்லேந்து இப்படித்தான் எடுத்துகிட்டு வந்த. இன்னிக்கு சொர்ணம் வீட்லேந்து கொணாந்திருக்க. நாளைக்கு யாரு வீடோ போ.. ” 
சாமி சிரித்துக்கொண்டான். அவனுடைய நினைப்பதெல்லாம், இன்னும் யார் யார் காகிதத்தை, குப்பை என்று ஒதுக்குகிறார்களோ, அவர்களிடமிருந்து அவற்றை வசூல் செய்யும் எண்ணத்தை, மயிலாத்தா அறிய வாய்ப்பில்லை. 
தெருவில், குப்பாத்தாளின் குரல் கேட்டவுடன், மயிலாத்தா வாசல்பக்கம் வந்தாள். 


” மயிலு,  பேப்பர் கம்பெனியில சாக்கட தண்ணி சரியா போவலியாம். மழை பெஞ்சதில தண்ணி எத்துக்கிட்டு வருதாம். ஆளுங்க தேவைன்னு சூப்பர்வைசர் சாரு எங்க வூட்டுக்கார் கிட்ட சொன்னாராம். இன்னிக்குத் தான் கட்டட வேலை கெடயாதே. நா போவலாம்னு இருக்கேன். நீ வரியா? போனா நாலு காசு தேறும் “. 
 சாமிப்பயலுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ” என்னம்மா, சாக்கட வேலையெல்லாம் செய்ய வேணாம். சொர்ணத்தோட ஆத்தா ஏன் இப்படி கேக்குது? அசிங்கமா இருக்கு ” 

” டேய், இன்னாடா? எந்தத் தொழிலும் மட்டமில்ல. ஆனா நாங்க கக்கூஸ் சாக்கட மாதிரி இருக்கிறத சுத்தம் செய்யப் போகல. பேப்பர் கம்பெனியில பேப்பரு கழிவு தண்ணி போற குழாவத்தான் சுத்தம் செய்யப் போறோம் ” என்றாள் குப்பாத்தா. 
” எங்க பூமா டீச்சர் சொல்லியிருக்காங்க. நம்ப நாட்டுல, ஒரு நாள் போகுற கழிவுல, 1,43,000 கிலோ காகிதத்தோட எடை இருக்குதாம். ஒரு கிலோ காகிதம் தயார் பண்ண  ரெண்டு கிலோ மரங்கள வெட்டணுமாம். அப்போ பாரு கம்பெனியில தயார் ஆனப்புறம் வெளியாகுதே அந்தக் கழிவுல எவ்வளவு மரங்கள் அடிவாங்கியிருக்குமோ தெரியல. ” 

தொடர்புடையவை:  யார் வந்து துயில் எழுப்புவார்?


” படிக்க வைக்கிறதே தப்பா போயிடும் போல இருக்கு. இந்தாடா, நாங்க ” அ” னா, ” ஆ” வன்னா படிக்காத சிறுக்கிங்க. எங்ககிட்ட போயி டீச்சர் சொல்லிச்சு, பீச்சர் சொல்லிச்சு ன்னு சொன்னா, எங்களுக்கு என்னாத்த புரியுது. ஏதோ துட்டு வந்துதா புள்ளைக்கு  கறி சோறு குடுப்பமான்னுமான்னு இருக்கேன். போயி எப் போதும்போல பொஸ்தகத்த கட்டிக்கினு அழு. நான் வேலைக்கு போயிட்டு வரேன் ” என்று சொன்னபடி வார் அறுந்த செருப்பை காலில் மாட்டிக்கொண்டு, பேப்பர் கம்பெனி பக்கம் நடையைக்கட்டினாள், மயிலாத்தா.


சாமி, ஒன்பதாவதுதான் படிக்கிறான் என்றாலும், சமூக ஆர்வம் அதிகம் உள்ளவன். தன்னால் நாட்டிற்கு உபயோகம் இருக்கிறதோ இல்லையோ, தன்னால் நாடு நஷ்டப்படக் கூடாது என்பதில் அதிகமான கருத்து உள்ளவன். போன சீசன் மழையில், தேங்கியிருந்த குட்டைத் தண்ணியில், நண்பர்களெல்லாம் சாதா கப்பல், கத்தி கப்பல் என்று விளையாடிய பொழுது, அவர்களிடம் செய்வது தப்பு என்று சொன்னான். அதனால் சண்டை கூட வந்தது. அதற்காக அவன் கவலைப்படவும் இல்லை.


இரண்டு வருடங்களாக சேர்த்து வைத்திருக்கும் எழுதாத காகிதங்களை வீட்டில் ஒரு பழைய டிரங்க் பெட்டியில் போட்டு வைத்திருந்தான். அதைத் திறந்து பார்த்தான். கணிசமான அளவில் இருந்தது. பக்கத்து வீட்டில் புதிதாகக் குடி வந்திருக்கும் காசிம் காக்காவிடம் கொடுத்தால், நோட்டாக தைத்துத் தருவார். பத்து நோட்டுங்கள் தேறும் என்று எண்ணிக்கொண்டான்.
காகிதங்களை தூக்கிக் கொண்டு, காசிம் காக்காவிடம் சென்றான். ” என்னடா சாமி. தூக்க முடியாம தூக்கிட்டு வாரே. நாஸ்தா சாப்டியா?”
” நீர் சோறு சாப்டேன் காக்கா. எனக்கு நோட்டு தைக்கணும். நீங்க தைச்சிக் குடுங்க. சாயங்காலம் அம்மா வந்தப்புறம் என்ன பணம்னு சொன்னீங்கன்னா கொண்டு வந்து தரேன்”
” சரி. இந்த பேப்பருங்கள எப்படி சேர்த்தே? “
 ” காக்கா, தெரிஞ்சவங்க மூல்யமா சேக்கறேன். அம்மா கூட உன்ன யாராவது குப்ப பொறுக்கின்னு சொல்லப் போறாங்கன்னு சொன்னாங்க. சொன்னா சொல்லிட்டு போவட்டும் காக்கா. ஆயிரம் கிலோ பேப்பர் வேணும்னா,  நல்லா வளந்த பெரிய பெரிய மரங்கள் முப்பது தேவப்படுதாம். அந்த மரங்கள பக்குவப்படுத்தி காகிதமாக்க, ஐம்பதாயிரம் லிட்டர் தண்ணி செலவழியுதாம். ஆயிரம் சதுர அடி வீட்டுக்கு ஒரு வருஷத்துக்கு உண்டான கரண்ட் செலவழியுதாம்.. இப்படி மரத்தயெல்லாம் வெட்டிக்கிட்டேயிருந்தா எப்படி மழை வரும் காக்கா. சொல்லுங்க. அதனால்தான் நான் காகிதத்த கணக்கா செலவழிக்கிறேன். “
காசிம், வைத்த கண் வாங்காமல் சாமியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.” குர்சீத்து, சாமிக்கு வர்க்கியும், ரெண்டு பேருக்கும் சாயும் கொண்டுவா ” என்று உள்ளே நோக்கி குரல் கொடுத்தார். 
” சாமி…, ஒனக்கு எப்படிப்பா எல்லாம் தெரியுது. நான் சாய் போட்டுக்கிட்டே கேட்டுட்டுதான் இருந்தேன். இந்தா கொஞ்சம் பசியாறு” என்றாள், காசிமின் மனைவி குர்ஷித். 
காசிம், பேப்பர்களை சீராக வெட்டி, அடுக்கி, கோணி ஊசியில், டுவைன் நூலைக் கோர்த்து, அடுக்கிய காகிதங்களில் துவாரம் இட்டு, ஓரங்களில், ஊசியைக்குத்தி, வெளியே வாங்குவதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். இனி அவனே தைத்துக் கொள்வான். 
மாலை வரை காசிம் காக்காவுடன் ஊர் கதை, உலகக் கதை எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தான்.  ‘ அடேய் சாமியோவ்’ என்கிற குரல் கேட்டவுடன், அம்மா வந்ததை அறிந்து கொண்டவன், ” காக்கா எவ்வளவுன்னு சொல்லுங்க” என்றான். காசிம் சிரித்தார். தைத்த நோட்டுக்களை கையில் எடுத்துக் கொண்டார். அவர்கள் குடிசையின் மயிலாத்தா நிற்பதைக் கண்டார். 

தொடர்புடையவை:  இறையன்பு கருவூலம்

” தாயீ, நீ சாதாரணமா ஒரு புள்ளய ஒலகத்துக்கு தந்துடல. ஒசந்த சிந்தனை, நேர்மையான குணம், ஒழுக்கமான வாழ்க்கை இப்படி வாழ நினைக்கிற நல்ல புள்ளய பெத்திருக்க. இத தைக்க எவ்வளவு பணம் தரணும்னு கேட்டான். நீ எதுவும் தர வேண்டாந்தாயீ. இந்த மாதிரி புள்ளைக்காக நான் உயிரையே குடுக்க தயாரா இருக்கேன். சாமி பையா, நீ பெரிய ஆளா வரணும். தேசத்துக்கு நிறைய நல்லது செய்யணும். செய்வியா? அல்லா உன்ன ஆசிர்வதிப்பார் ” என்று குரல் தழுதழுத்தார். 


” காக்கா, மரங்கள வெட்டி, காகிதம் தயாரிக்கும் முறைக்கு பதிலா, மரங்கள வெட்டாம என்ன பண்ணலாம்னு யோசிச்சு, நிச்சயமா ஒண்ண கண்டுபிடிப்பேன்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு காக்கா. நமக்கு பிராணவாயு கிடைக்க மரங்கள் உதவுதுன்னு எங்க பூமா டீச்சர் சொல்வாங்க. மரங்களையும் வாழ வைச்சு, நாம்பளும் வாழனும். நான் சொல்றது சரிதானே காக்கா? ” 
வயதாகி இருந்தாலும், அவரின் உறவினர்கள் காக்கா என்று கூப்பிட்டு, ஊருக்கே காக்காவாகிப் போயிருந்தார். காசிம் காக்காவுக்கு நம்பிக்கைத் துளிர் விட ஆரம்பித்ததில் வியப்பில்லை. 
இது எதுவுமே புரியாமல், ‘ என்ன ஆச்சு இந்த சாமிப்பயலுக்கு?’  என்பது போல், மயிலாத்தாவும், குப்பாத்தாளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். 


சாமியைப் போல் ஒவ்வொரு விஷயத்திலும் தனிமனிதன் அக்கறை செலுத்தினால், புதிய பாரதத்தை விரைவில் காணலாம். காசிம் காக்காவிற்கு மட்டும் அந்த ஆசை இல்லை. நாம் எதிர்பார்ப்பதுவும் புதிய விடியலைத்தானே. 

மாலதி சந்திரசேகரன்.

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *