பாரதி இன்றிருந்தால்……….

பாரதி இன்றிருந்தால் பல கவிதை வந்திருக்கும்
பார் புகழ  பாரதமும் பல வகையில் வென்றிருக்கும்
கலைகள் பலவற்றோடு கல்வியும் ஒன்றென்றிருக்கும்
நிறையும் அறிவால் வாழ்க்கை குறைவின்றி சென்றிருக்கும்

மாலை முழுதும் ஆடி விளையாட்டில் வென்றிருக்கும்
மார்பில் பதக்கங்கள் சூடி மதர்ப்போடு நின்றிருக்கும்
ஆலைகள் பலகண்டு அரும்பணிகள் பிறந்திருக்கும்
ஆயுதங்கள் செய்வதிலும் அகிலத்தில் சிறந்திருக்கும்

உழவர்களின் வாழ்வுநிலை உலகத்தரம் பெற்றிருக்கும்
பழமைகள் தனை ஒழித்து பல பாடம் கற்றிருக்கும்
மாதர்களை இழிக்கின்ற மனநிலை உடைத்திருக்கும்
சாதனைகளில்  பெண்மை சரித்திரம் படைத்திருக்கும்

பக்தியின் சக்தியினை பாருக்குரைத்திருக்கும்
பாமரர்க்கும் பரமனுக்கும் பாலம் அமைத்திருக்கும்
மெய்ஞ்ஞான வேள்விக்கு ஊற்றாய் சுரந்திருக்கும்
விஞ்ஞான வேட்கைக்கு விருந்தாய் இருந்திருக்கும்

தீண்டாமை எனும் சொல்லை அகராதி கொன்றிருக்கும்
வேண்டாத சட்டங்கள் இனி இல்லை என்றிருக்கும்
சாதி சாத்திரங்களெல்லாம் கரையான்கள் தின்றிருக்கும்
சமத்துவ சமுதாயம் சத்தியமாய் நின்றிருக்கும்

‘புதிய திசைகள்’ கண்டு பேருவகை கொண்டிருப்பார்  விதியை மாற்றப்போகும் வலிமையினைக் கண்டிருப்பார் உணர்வை உருக்கும் பல கவிதைகள் நெய்திருப்பார்  உலக அரங்கில் நம்மை தலை நிமிரச் செய்திருப்பார்!!!


இர ஸ்ரீனிவாசன் 
ஹைதராபாத்

Share this
தொடர்புடையவை:  கனவிலொரு காதல்

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *