குடும்ப ஒற்றுமையை உருவாக்கும் பங்குனி உத்திரம்!

தமிழ் மாதத்தில் நிறைவான மாதமாக வருவது பங்குனி மாதம். பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். இது குடும்ப ஒற்றுமையை உருவாக்கும் புனித மாதமாக அமைகிறது. பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பௌர்ணமியும் சேரும் நாள் என்பதால் பௌர்ணமியின் பலன்களும் கூடுதலாக அமையும் நாளாக அமைகின்றது.

ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி பல்வேறு சிறப்புகளை அளிக்கிறது. அதில் பங்குனி மாத பௌர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவதுடன், தமிழ்கடவுள் முருகனுக்கு விழா எடுக்கும் ‘பங்குனி உத்திரம்” தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

பங்குனி உத்திரம் நன்னாளில் இறைவனின் திருமணத்தை கண்டு வணங்குவது அனைத்து நலன்களையும் தரும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு வெகுவிரைவில் திருமண வரம் கிடைப்பதாக நம்பிக்கை. திருமணமானவர்கள் வாழ்வில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியான நிலை பெற பங்குனி உத்திர நாளில் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.

அந்த வகையில் இந்த வருடம் 28.03.2021 (பங்குனி 15) ஞாயிற்றுக்கிழமை இன்று பங்குனி உத்திரம் வருகிறது.

பங்குனி உத்திரம் அன்று நாம் குலதெய்வங்களை வழிபடுவதன் மூலம் நம்முடைய மூதாதையரின் ஆசியும் நமக்கு கிடைக்கிறது. இதன் மூலம் நம்முடைய குலம் சிறக்கும். வாழ்வும் சிறப்பாக அமையும்.

பங்குனி உத்திரத்தில் நடைபெற்ற சிறப்புகள் :
திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில்தான்.

ராமபிரான் – சீதாதேவி, பரதன் – மாண்டவி, லட்சுமணன் – ஊர்மிளை, சத்ருக்னன் – ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில்தான்.

ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில்தான்.

பலன்கள் :

நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும்.

இந்த நாளில் திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும்.

பங்குனி உத்திர விரதம் இருந்து நாராயணன், லட்சுமிதேவி அடைந்ததைப்போல் நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.

கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். கல்வியும், செல்வமும் சேர்வதன் மூலம் சிறந்த தொழில் அதிபர்களாகவும், சிறந்த வேலையை பெறுபவர்களாகவும் மாற முடியும்.

உத்தியோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன், சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்ப ஒற்றுமையும், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.

பங்குனி உத்திர நாளில் விரதமிருந்து ஆத்ம பலமும், மனோபலமும் ஒரு சேர பெறுவோம்…!

தொடர்புடையவை:  தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவுக்கு ஏற்பாடு

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *