அனுமனை கண்ட சீதை – வால்மீகியும் கம்பனும்

இப்படியும் ஒரு “க்ளைமாக்ஸ்”

திரைப்படம் 150 நிமிடங்கள். தொலைக்காட்சித் தொடர்களோ, முடிவில்லாதவை. இராமாயணம் போல இழுக்காதீர்கள் என்கிறீர்களா? சரியாகத்தான் சொல்கிறீர்கள்.

எத்தனைதான் கேட்டதையே கேட்பது. எத்துணை முறை கேட்டாலும், இராமன் இராமன்தான். இராமனின் பேரை மாற்றமுடியாது. ஆனால் இதே “concept” ஐ உபயோகித்து, old wine in new bottle என்ற வகையிலே, பேரை மாற்றி, இடத்தை மாற்றி, ஆட்டை குட்டியாக்கி, ஆட்டுக்குட்டியை யானையாக்கி, குரங்கை பேசவைத்து….

“என்னதான் சொல்லறே கோபாலா?, போதும் விஷயத்துக்கு வா?”

“வரேன் வந்துட்டேன் “

“போதும் பொறந்தாத்துப் பெருமை”

ஆமாம் பொறந்தாத்துப் பெருமைதான்! அவதார புருடன் இராமன் பிறந்த இந்த பூமியின் பெருமைதான். அதை சொல்லி மாளாது. இருப்பினும் ஒரு துளி.

அனுமன் இலங்கையில், அசோக வனத்தில், சீதையை காண்ககிறான்! இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தாரில்லை. சீதை பயந்து போயிருக்கிறாள். அப்பொழுதான் இராவணன் வந்து மிரட்டி சென்றிருக்கிறான். சீதையால் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை. பூமி ஒரு சாது. சாது மிரண்டால் காடு கொள்ளாதே? ஆனால் இவள் வேறு. “போதும்’. உயிர் துறக்க முடிவெடுக்கிறாள்.

அனுமன் இதை பார்த்துக் கொண்டே இருக்கிறான், அவனும் பொறுமை இழக்கிறான்.

இங்குதான் வால்மீகியும் கம்பனும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போமே?

முதலில் கம்பன்!

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று தீயொழுக்கத்திற்கு சப்பைக்கட்டு கட்டு கட்டும் இந்த காலத்தில் கம்பன் இவ்வாறு சொன்னான் அன்று! என்றும் இது பொருந்தும்!

தன்னுயிர் மாய்க்க எண்ணிய சீதை, பிறர்மனை எய்திய பெண்ணைப் பேணுதல் திறன் அலது என்கிறாள். ஆனால் அதை துணிந்து செய்கிறான் இராவணன். “என் இறைவனோ, என்னை கை விட்டு விட்டான். இது அவனுக்கு நற்பெயர் சேர்க்காது. எனவே, நானும் எதற்கு என் உயிரை வைத்து கொண்டு இருக்க வேண்டும்” –
புறன் அலர்,அவன் உற, போது போக்கி – என்று இதை கம்பன் குறிப்பிடுகிறான்!

உயிரை விட எண்ணும் போது, மரத்தின் மீது இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த அனுமன் உடனே, கீழே குதிக்கிறான்

கண்டனன் அநுமனும் : கருத்தும் எண்ணினான்: கொண்டனன் துணுக்கம் மெய்தீண்டக் கூசுவான்அண்டர் நாயகன்* அருள்தூதன் யான்! ‘எனாத்
தொண்டை வாய் மயிலினைத் தொழுது தோன்றினான்

உடனே போட்டு உடைத்துவிட்டான், நான் இராம தூதன் என்று. இவ்வாறாக கம்பனின் காவியம் செல்கிறது.

வால்மீகி என்ன சொல்கிறான்?

பிராணத்யாகச்ச வைதேஹ்யா பவேத நபி பாஷணே৷৷5.30.36৷৷
ஏஷ தோஷோ மஹாந் ஹிஸ்யாந் மம ஸீதாபி பாஷணே

நான், சீதாப்பிராட்டியிடம் பேசுவதும் சரியாக இருக்காது. ஆனால், பேசாமல் போனால் அவள் உயிரை விட்டு விடுவாள். எனவே, அவன் ஒரு முடிவெடுக்கிறான். இராம காதையை, அன்று வரை நடந்ததை, அவள் காதுபட உரத்து சொல்கிறான்.

தொடர்புடையவை:  கம்பன் கவிச்சாறு

“ராஜா தஷரதோ நாம ரதகுஞ்ஜரவாஜிமாந்”

தேர்களும், சேனைகளும், செங்கோலும் கொண்ட தசரதன் என்றொரு அரசன் இருந்தான் இன்று ஆரம்பிக்கிறான் அனுமன். முழு கதையையும் சொல்கிறான்.

திரும்பிக் பார்க்கிறாள் , யாருமில்லை. ஆனால், மேலே ஒரு குரங்கு கதை சொல்லிக்கொண்டு இருக்கிறது. இது அரக்கனின் மாயமோ என்று கூட நினைக்கிறாள்.

பிறகு ஒருவாறாக, நம்பிக்கை கொண்ட சீதை அனுமனிடம் தன கதையைக் கூற, அனுமனும் அதை ஆமோதிக்க, அவனும் தண்டகாரண்யத்தில், இரவாணன் இவளை கவர்ந்து சென்றது முதல், தானும் சுக்கிரீவனும் அனுமனுக்கு உதவி புரிய, இவளை தேடிக்கொண்டு இராம தூதனாக பொறுப்பை ஏற்றது வரை… அனைத்தையும் சொல்லி சீதையின் ஐயத்தை போக்குகிறான். பிறகு. சூடாமணி படலம்… இவ்வாறு வால்மீகியின் இதிகாசம் பயணிக்கிறது.

அதாவது, வால்மீகியின் கதை, அது கம்பனின் வடிவில் அவ்வளவே. ஆனால் கதையும் தர்மமும் ஒன்றே!

எண்ணமும் ஆக்கமும்

க. ச. கோபாலகிருஷ்ணன்

Share this

4 Comments

 • Saradha Santosh

  வித்யாசமான அணுகுமுறை..
  சிறந்த தொடராக விளங்க வாழ்த்துகள்..

 • ப. கோபாலன்

  சுவாரசியமான ஒப்பீடு. சீதாப் பிராட்டி சாகத்துணிந்து அதற்கான முயற்சியில் இறங்கப்போகும் கணத்தில் காலம் தாழ்த்தினால் விபரீதம் என்றுணர்ந்து, அனுமன் உடனே மரத்திலிருந்து குதித்து செய்தியைச் சொல்லுவதுதான் சரி என்பது கம்பரின் முடிவு. அசோக வனத்தில் குரங்குகள் குதித்துத் தாவுவது சகஜம். ஆதலால் சீதைக்
  கு அது ஒரு அதிர்ச்சியளிக்கும் செயல் அல்ல.
  வால்மீகி சீதையின் அதிர்ச்சியடைந்த மனநிலையை திசைதிருப்பும் எண்ணத்தில் அனுமன் மதுரமான குரலில் இராமசரிதத்தை பாடுவதாக எழுதியுள்ளார்.
  இரண்டு நோக்குகளும் ரசிக்கத்தக்கவை. கம்பனின் சித்தரிப்பு இயற்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *