நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டுகோள்!

கோடை குருவை நெல் கொள்முதலுக்கு கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து ரூ2500 விலையில் கொள்முதல் செய்திட முதலமைச்சருக்கு
பிஆர் பாண்டியன் வேண்டுகோள்..

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிடுவார் என்ற எதிர்பார்ப்போடு காத்துள்ளனர்.கோடை உழவு பணிகள் நேரடி விதைப்பு செய்வதற்கு தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.

இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர் வாருவதற்கு நீர்ப்பாசனத்துறை ரூபாய்48 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி வரவேற்கத்தக்கது. பணிகள் குறித்து வெளிப்படைத் தன்மையோடு குறிப்பிட்ட காலத்தில் துவங்கி குறித்த காலத்தில் முடித்திட வேண்டும். பணிகளுக்கான முழு விபரங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் பணிகள் துவங்கும் இடத்தில் உடனடியாக அமைத்திட வேண்டும் இதனை விவசாயிகள் கொண்ட குழுக்கள் மூலம் கண்காணித்திட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம்.அதே நேரத்தில் காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை அரசு திரும்பப் பெற முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். போராட்டக் களத்தில் தீவிரமாக பங்கேற்ற காரணத்தினால் என் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதை காரணங்காட்டி எனக்கு (பி.ஆர்.பாண்டியன் ) பாஸ்போர்ட் வழங்குவதற்கு கூட மத்திய அரசு தடை விதித்துள்ளது என்பதை உணர்ந்து தமிழக அரசு வழக்குகளை ரத்து செய்ய அவசர நடக்க மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழகம் முழுமையிலும் முன் பட்ட கோடை குருவை அறுவடை துவங்கி நடந்து வருகிறது.பல்வேறு மாவட்டங்களில் அறுவடை செய்த நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைக்கப்பட்டு விவசாயிகள் காத்துக் கிடக்கிறார்கள். உடனடியாக தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2500 விலை வழங்க முன்வர வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து ரூபாய் 40 முதல் 50 வரை சிப்பம் ஒன்றுக்கு கட்டாய வசூல் நடத்தப்படுவதையும், மேலும் தவறுகள் நடக்கா வண்ணம் கொள்முதல் நடைபெறுவதை உறுதி செய்வதற்கும் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திற்கும் கிராம நிர்வாக அலுவலர் விவசாயிகள் கொண்ட கண்காணிப்பு குழுக்கள் அமைத்திட வேண்டும். தவறுகள் நிகழும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தற்காலிக பணியாளராக பணிபுரியும் பட்டியல் எழுத்தர், உதவியாளர்களை மட்டும் நடவடிக்கைக்கு உள்ளாக்குவது பயனளிக்கவில்லை. எனவே நிரந்தர அலுவலர்களாக செயல்படக்கூடிய கொள்முதல் நிலைய அலுவலர்கள்(Po) மற்றும் மண்டல துணை மேலாளர்கள் (DM) வரையிலும் நடவடிக்கைக்கு உட்படுத்துவதை கண்டிப்புடன் பின்பற்ற தமிழக அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.

தொடர்புடையவை:  தோட்டக்கலைத்துறை மூலம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க முடிவு

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடி அருகே எட கீழையூர், எட அன்னவாசல் எடமேலையூர் உள்ளிட்ட கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் சேமித்து வைத்திருப்பதை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், பாலையன், மகேந்திரன், கந்தகுரு, முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இவன் : என்.மணிமாறன் செய்தி தொடர்பாளர்

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *