கொரோனா பரவலை தடுக்க வீடுகளுக்கே சென்று நோயாளிகளை வகைப்படுத்தும் மருத்துவ குழு

சேலம்:
சேலம் மாநகராட்சியில் கொரோனா பரவலை தடுக்க வீடுகளுக்கே சென்று நோயாளிகளை வகைப்படுத்தும் மருத்துவ குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக ஆணையாளர் ரவிச்சந்திரன் கூறினார்.

கலந்துரையாடல்:

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் 60 வார்டுகளுக்கும் நியமிக்கப்பட்ட மண்டல அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேற்று கலந்துரையாடினார். 

இந்த நிகழ்ச்சி ஸ்ரீசாரதா பாலமந்திர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது:-
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்றை முற்றிலும் தடுக்கும் வகையில் 100 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு, வீடாக சென்று காய்ச்சல், உடல்வலி, தலைவலி, சளி, இருமல், மூச்சுத்திணறல், சுவையின்மை போன்ற கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து உடனடி சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 700 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் மொத்தம் 2,100 களப்பணியாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று (நேற்று) மட்டும் நடைபெற்ற சிறப்பு முகாம்களின் மூலம் 550 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

மருத்துவ குழு:
இவர்களுக்கு மண்டல அலுவலர்கள் முறையாக பயிற்சி வழங்க வேண்டும். களப்பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று தேவையானவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடமாடும் பரிசோதனை வாகனங்களில் செல்ல வேண்டும்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை 24 மணி நேரத்திற்குள் வீட்டிலேயே சென்று வகைப்படுத்தி அவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்க மருத்துவ குழுவினர் அடங்கிய நடமாடும் வகைப்படுத்தும் வாகனங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அளவு, நோய் தன்மை குறித்து பரிசோதித்து வழிகாட்டும் பணிகளையும் ஒருங்கிணைத்து நோய் தொற்றினால் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு மண்டல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநகர பொறியாளர் அசோகன், உதவி ஆணையாளர்கள் ராம்மோகன், சரவணன், சண்முகவடிவேல், ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share this
தொடர்புடையவை:  வானொலியில் செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *