விறகுகளாய் எரியும் வீணைகள்

• ஆசிரியர்: முனைவர் திரு. சுந்தரமுருகன் அவர்கள், சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினர், புதுச்சேரி அரசு – சட்டத்துறை மொழி பெயர்ப்பாளர், புதுச்சேரி, தலைவர் – அபயம் தொண்டு நிறுவனம், புதுச்சேரி, பொதுச்செயலாளர் மற்றும் சிறப்பாசிரியர் – நண்பர்கள் தோட்டம் – இலக்கியத் திங்களிதழ், புதுச்சேரி.

• பக்கங்கள்: 140
• விலை: ரூ 140/-
• வெளியீடு: நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி.

நெருப்புக் குழம்புகள் இறுகி கருத்த கண்ணகியாக மாறிய கவிஞராக உருவெடுக்கிறார் ஆசிரியர் முனைவர் திரு. சுந்தரமுருகன் அவர்கள். திருந்துங்களேன் மனித விலங்குகளே…! என ஆதங்கப்படுகிறார். மத(து), இன, சாதி வெறி, உலகெங்கும் தேவையான உண(ர்)வும், உழைப்பும், உழ(யர்)வும், இயற்கையின் தேவையும், இவற்றை தள்ளிவிட்டு நாம் காட்டும் அலட்சியம், மலர விடாத மனித நேயம் என நம் பல(வீனக்) கவனக்குறைவினை அறியச் செய்கிறார். இந்தியத் திருநாட்டில் சரித்திரங்களை விட்டுச் சென்ற சாதனைச் செல்வர்களின் துணைக் கொண்டு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக ஓங்கி உரைத்திருக்கிறார். இலக்கியங்களின் பக்கம் ஒட்டியிருக்கச் சொல்கிறார். கவிதைச் சாரலால் இயற்கையையும், காதலையும் கொஞ்சியிருக்கிறார். பெண்மையைப் போற்றுகிறார். இன்னும் பல…!

தண்டவாளத்தின் இருபுறமாய் திரு. சுந்தர முருகன் அவர்களின் தீஞ்சுவை தமிழும், முனைவர் திருமதி. வி. இளவரசி சங்கர் அவர்களின் வணிக மொழியான ஆங்கில ஆக்கமும் ஒரே எண்ணப் புள்ளியில் குவிந்து நிற்கின்றன. அட்டையில் ரௌத்ரத்துடன் கண்ணகியும் மற்றும் குளிர்ந்த புன்னகையுடன் ஆசிரியரும் என முரணையும் ரசிக்க வைக்கிறார்கள். புத்தகத்தினுள் பறக்கின்ற கோட்டோவியப் பறவைகள் ஆணும், பெண்ணும் ஒருங்கே சிந்தித்து சமூகத்தை உயர்த்த வேண்டும் என்று உணர்த்துகின்றன.

இந்நூலாசிரியரின் அன்பு நிறை நண்பர், சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் “விசாரணைக் கமிஷன்” நாவல் மூலமாகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான “சாயாவனம்” திரு. சா. கந்தசாமி அவர்களுக்கு காணிக்கையாக்கப்பட்ட இந்நூலினை,
ஆழ்ந்த அலசல்களுடன் ஆங்கிலத்தில் வாழ்த்தியுள்ளார் பேராசிரியர், முனைவர் திரு. கு. சிவமணி அவர்கள் – மேனாள் முதல்வர், கரந்தை புலவர் கல்லூரி, தஞ்சை மற்றும் முன்னாள் ஆய்வாளர் – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை. இலக்கணக் கண்ணோட்டத்தினால் அளந்திருக்கிறார் பாவலர் திரு. புதுவை யுகபாரதி அவர்கள் (தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர், சாகித்ய அகாதெமி, சிறப்பாசிரியர், நண்பர்கள் தோட்டம் இலக்கியத் திங்களிதழ், புதுச்சேரி). படைப்புகளோடு ஆசிரியரின் மனித நேயத்தால் நெகிழ்ந்து நட்பு உறவா(ரையாற்று)கிறார் முனைவர் திருமதி. அ. அனிதா பரமசிவம் அவர்கள் (தமிழ் உதவிப் பேராசிரியர், பத்மவாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம், வெற்றிமுனை ஆணையாசிரியர் மற்றும் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மைய ஆலோசனைக் குழு உறுப்பினர்). கவிதைகளின் கதையுடன், புதுச்சேரிப் படைப்பாளர்கள் சிலரையும் மேற்கோள் காட்டி பெருமிதம் கொண்டு ஆரத் தழுவுகிறார் ஆசிரியரை, எழுத்தாளர் திரு. கன்னிக்கோவில் ராஜா அவர்கள். படித்தால் பார் பயன் பெறும் என்ற தொலைநோக்குப் பார்வையுடனும் மற்றும் நம்பிக்கையுடனும் கைக்கோர்த்து நம்மை அழை(ரவணை)க்கிறார் ஆசிரியர் முனைவர் திரு. சுந்தர முருகன் அவர்கள்,
சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினர், புதுச்சேரி அரசு – சட்டத்துறை மொழி பெயர்ப்பாளர். இயற்கையிடம் காட்டும் அலட்சியத்தைப் போல் இப் புத்தகத்தை எண்ணக் கூடாது என்பதே உள்ளு(உண்மையு)ரை!

தொடர்புடையவை:  மன வானில் உலா வரும் ஹைக்கூ …

கவிஞர் மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.

Share this

One Comment

  • Saradha Santosh

    அற்புதமான நூல் விமர்சனம்.. வாழ்த்துகள் தோழி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *