வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 4 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து நேற்று மதியம் சந்திரகாசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் பன்னீர்செல்வம், வேல்முருகன், ராஜேஷ், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று கோடியக்கரைக்கு தென்கிழக்கே இன்று காலை வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த 2 பைபர் படகில் வந்த 8 கடற்கொள்ளையர்கள் இவர்களது படகை வழிமறித்து படகில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி, இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
பிறகு படகில் இருந்த 4 லட்சம் மதிப்புடைய 700 கிலோ மீன்பிடி வலையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். உடனடியாக 4 மீனவர்களும் அவசரமாக கரைக்கு வந்து சேர்ந்தனர். தாக்குதலில் கை மற்றும் கால்களில் உள் காயம் அடைந்த 4 மீனவர்களும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவ கிராமங்களுக்கிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.