சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளமாக, தமிழக ஆட்சியாளர்களின் ஆட்சி பீடமாக, எதிர்கால சந்ததியினருக்கு வரலாறாக திகழும் புனித ஜார்ஜ் கோட்டை குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் சென்னை தின கொண்டாட்ட தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
கடலலைகள் வாசலிலே தண்ணீர் திவலைகளைத் தூவிட, வீசுகின்ற கடல் காற்று உப்புச்சுவை பெற்று உலா வரும் இடமான வங்கக் கடல் விளிம்பில் சென்னையின் வரலாற்றுக்கு புகழ் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது புனித ஜார்ஜ் கோட்டை.
எத்தனையோ ஆண்டுகள்….. எவ்வளவோ ஆட்சியாளர்கள்…. எண்ணற்ற வாக்குவாதங்கள்… எண்ணிலடங்கா சட்டங்கள்…. அத்தனையையும் எதிகொண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க வசீகரத்தோடு காட்சியளிக்கும் புனித ஜார்ஜ் கோட்டை சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளமாக இருந்து வருகிறது.
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையான கொல்கத்தாவிலுள்ள வில்லியம் கோட்டை காலப்போக்கில் சிதைந்துவிட, இரண்டாவதாக கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை என்றென்றும் அசைக்க முடியாத கோட்டையாக வானளவு உயர்ந்து நிற்கிறது.
1640ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை, தொடக்கத்தில் வணிக மேம்பாட்டிற்காக கட்டப்பட்டது எனக் கூறினாலும், உண்மையில் ராணுவப் படைக்கலன்கள் வைத்து பாதுகாக்கும் இடமாகவே இருந்திருக்கிறது. இக்கோட்டையில் உள்ள பல கட்டடங்கள் பண்டைய நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் வரலாற்று ஆவணங்களாக இன்றளவும் திகழ்ந்து வருகின்றன.
1687ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையில் நாட்டிலேயே உயரமான மரத்திலான கொடிக்கம்பத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் கொடி முதன்முதலில் ஏற்றி வைக்கப்பட்டது. தற்போது இடத்தில் தான் இந்தியாவின் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது.
புனித ஜார்ஜ் கோட்டைக்குள் ராணுவ அலுவலகங்களும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகமும், மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வு அலுவலகங்களும், அருங்காட்சியகமும் அமைந்துள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க அழகிய சட்டப்பேரவை மாமன்ற அறைக்குள் கண்ணைக் கவரும் மரவேலைப்பாடுகளும், உயரத்திலிருந்து கலைநயமிக்க அழகுடன் தொங்கும் விளக்குகளும், நாற்புறமும் இருக்கும் எழில்மிகு மாடங்களும் காண்போரை கவர்ந்திழுக்கும் பேரழகு கொண்டது.
புனித ஜார்ஜ் கோட்டையே இன்றைய சென்னை மாநகரம் உருவாக அடிப்படை காரணம் என சொல்லப்படும் அளவிற்கு சிறப்பு பெற்றது. எதிர்கால சந்ததியினருக்கு வரலாறாகவும், பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் தீட்டப்படும் அமுதசுரபியாகவும் விளங்கும் புனித ஜார்ஜ் கோட்டையின் புகழ் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும்.