ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்த நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும், சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை முதல் நீர்வரத்து சரியத் தொடங்கியது. இன்றைய நிலவரப்படி நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக சரிந்ததால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெய்த தொடர் மழையால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட வனத்துறை உத்தரவிட்டது. தற்போது நீர்வரத்து குறைந்ததால் 2 மாதங்களுக்கு பிறகு அனுமதியளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.