2 நாள் பயணமாக புருனே தலைநகர் பந்தர் செரி பேகவான் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா- புருனே இடையே தூதரக ரீதியில் நட்புறவு ஏற்பட்டு 40 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, அந்நாட்டுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு புருனே மன்னர் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா அழைப்பு விடுத்தார்.
அதன்பேரில், புருனே தலைநகர் பந்தர் செரி பேகவான் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் ஹாஜி அல்-முஹ்ததீ பில்லா உற்சாகமாக வரவேற்றார். தொடர்ந்து, புருனே ராணுவ அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பின்னர், பிரதமர் மோடி ஹோட்டலுக்கு சென்றபோது இந்திய வம்சாவளியினர் அவரை ஆரவார முழக்கத்துடன் பதாகைகளை ஏந்தி வரவேற்றனர். சிறுமி வரைந்த இந்திய தேசிய கொடி ஓவியத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டு, அவரை பாராட்டினார். அப்போது இந்திய வம்சாவளியினரின் குழந்தைகளை கையில் தூக்கி பிரதமர் மோடி கொஞ்சி மகிழ்ந்தார். அவருடன் இந்திய வம்சாவளியினர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.