ஆவடி கனரக ஊர்தி ஆலை வேலைகளை வெளி மாநிலத்தவருக்கு தாரை வார்ப்பதா?- ராமதாஸ்

Estimated read time 1 min read

ஆவடி கனரக ஊர்தி ஆலை வேலைகளை வெளி மாநிலத்தவருக்கு தாரை வார்ப்பதா? மாநில ஒதுக்கீட்டுக்கு சட்டம் வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை அடுத்த ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கனரக ஊர்தி ஆலைக்கான தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமனத்தில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவருக்கு தாரைவார்க்க ஆலை நிர்வாகம் சதி செய்து வருகிறது.

சி மற்றும் டி பிரிவு பணிகள் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களூக்கே வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் விதிகள் தெரிவிக்கும் நிலையில், அதை மதிக்காமல் தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.

மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் படைக்கலன் தொழிற்சாலை வாரியத்தின் கீழ் செயல்பட்டு வந்த 41 இராணுவ தளவாட தொழிற்சாலைகள் கடந்த 2021-ஆம் ஆண்டில் 7 பொதுத்துறை நிறுவனங்களாக மறுவரையறை செய்யப்பட்டன.

ஒவ்வொரு நிறுவனத்தின் கீழும் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட 7 நிறுவனங்களில் ஒன்றான கவச வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள 5 தொழிற்சாலைகளில் ஒன்று தான் ஆவடி கனரக ஊர்தி ஆலை ஆகும். ஆவடி கனரக ஊர்தி ஆலை தனி நிறுவனமாக்கப்பட்ட பிறகு கடந்த 3 ஆண்டுகளில் தொழில்நுட்பப் பணியாளர்கள் எவரும் நியமிக்கப் படாத நிலையில், முதன்முறையாக 17 பிரிவுகளில் 271 பேரை ஓராண்டு முதல் 4 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிக்கை கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

அதன்படி, 271 பணியிடங்களுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 8 வகையான பணிகளில் 67 பணியிடங்களுக்கான திறன் தேர்வுக்காக 87 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் மட்டும் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 90%க்கும் கூடுதலானவர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலையில் 90%க்கும் கூடுதலான பணிகளை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்ப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இதை அனுமதிக்க முடியாது.

ஆவடி கனரக ஊர்தி ஆலையில் வெளி மாநிலத்தவரை திணிக்கும் விஷயத்தில் அப்பட்டமான விதிமீறலும், முறைகேடுகளும் நிகழ்த்தப்படுவதாக தெரிகிறது. ஆவடி கனரக ஊர்தி ஆலைக்கான ஆள்தேர்வு போட்டித் தேர்வு அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதில்லை. தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமனங்கள் அனைத்தும் தேசிய டிரேட் சான்றிதழ்/ தேசிய தொழில்பழகுனர் சான்றிதழ் தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் தான் 87 பேர் திறன் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருப்பதாக கனரக ஊர்தி ஆலை தெரிவித்துள்ளது. ஆனால், அவர்களின் மதிப்பெண்கள் விவரம் வெளியிடப்படவில்லை என்பதால் இதில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

அடுத்ததாக, மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை கடந்த 05.07.2005-ஆம் நாள் வெளியிடப்பட்டு, 17.01.2007-ஆம் நாளில் உறுதி செய்யப்பட்ட அலுவலக குறிப்பாணை மற்றும் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள் வெளியிடப்பட்ட ஆணையின்படி, சி மற்றும் டி பணிகளில் பணியிடம் அமைந்துள்ள மாநிலத்தவரைத் தான் அமர்த்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழகத்தவரை போட்டித்தேர்வு இல்லாமல் நேரடியாக நியமனம் செய்யும் போது பட்டியலினத்தவருக்கு 19%, பழங்குடியினருக்கு 1%, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% வீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இடஒதுக்கீட்டை ஆவடி கனரக ஊர்தி ஆலை கடைபிடித்துள்ள போதிலும், உள்ளூர் ஒதுக்கீட்டு விதி பின்பற்றப்படவில்லை.

ஆவடி கனரக ஊர்தி ஆலையும், அதை உள்ளடக்கிய கவச வாகனங்கள் உற்பத்தி நிறுவனமும் தனி நிறுவனங்களாக அறிவிக்கப்பட்ட பிறகு, அவற்றுக்கான ஆள்தேர்வு விதிகள் இன்னும் வரையறுக்கப்பட வில்லை. அத்தகைய சூழலில் பிற மாநிலத்தவருக்கு சாதகமாக போட்டித்தேர்வுகளை நடத்தாமல், அவர்கள் பெற்ற தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண் அடிப்படையில் நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதேபோல், கடைநிலை பணிகள் பெரும்பாலும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலை ஆவடி கனரக ஊர்தி ஆலை நிர்வாகம் நடைமுறைப்படுத்த மறுப்பது அப்பட்டமான சமூக அநீதி ஆகும்.

கனரக ஊர்தி ஆலை மட்டும் தான் என்றில்லாமல், மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்துமே உள்ளூர் இட ஒதுக்கீடு வழங்குவதில்லை. தெற்கு தொடர்வண்டித் துறை, திருச்சி பொன்மலை ரயில்பெட்டித் தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட எந்த நிறுவனமும் மாநில இட ஒதுக்கீடு வழங்குவதில்லை. இந்த நிறுவனங்களை அமைப்பதற்கான நிலங்களையும், பிற வளங்களையும் வழங்கியது தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் தான். தமிழ்நாட்டு மக்களிடமிருந்து பெற்ற வளங்களைக் கொண்டு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் நிறுவனங்கள், அந்த மக்களுக்கு கடைநிலை வேலைவாய்ப்புகளைக் கூட வழங்க மாட்டோம் என்று கூறுவது மன்னிக்கவே முடியாத துரோகமும், சமூகநீதிப் படுகொலையும் ஆகும்.

மத்திய அரசுத் துறைகளும், நிறுவனங்களும் மாநில இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பதற்கு காரணம், மாநில ஒதுக்கீடு என்பது வழிகாட்டுதலாக இருக்கிறதே தவிர, கட்டாயமாகவும், சட்டமாகவும் இல்லாதது தான். இந்த நிலையை மாற்றவும் உள்ளூர் மக்களுக்கு வேலைகிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள கடைநிலைப் பணிகளில் 100 விழுக்காடும், பிற பணிகளில் 50 விழுக்காடும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author