சீன ராணுவத்தின் தரைப்படை தளபதியான லீ கியோமிங் இஸ்லாமாபாத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, பலுசிஸ்தான் விடுதலை படையினரால் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
தற்போதைய,பலூசிஸ்தான் எழுச்சி பாகிஸ்தானுக்குப் பெரும் அச்சுறுத்தளாக அமைந்திருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1948ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பாகிஸ்தானுடனான பலூசிஸ்தானின் இணைப்பு, இராணுவத்தின் நிர்பந்தந்ததால் நடந்ததே ஒழிய பலூச் மக்களின் விருப்பத்தால் நடக்கவில்லை.
1948ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை பலூசிஸ்தானில் ஐந்து முறைகள் மிகப் பெரிய போராட்டங்கள் நடந்துள்ளன.
எனினும், கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி காவல் நிலையம், பாதுகாப்புப் பணியாளர்கள், பாலங்கள், ரயில் பாதைகள், வாகனங்கள் போன்றவற்றின் மீது பலூசிஸ்தான் விடுதலை படையினர் தாக்குதல் நடத்தினர்.
2006ம் ஆண்டு அன்றைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் சீனாவுக்கு சென்று திரும்பிய நிலையில், பலூச் மக்களின் உரிமைக்கும், நாட்டின் விடுதலைக்கும் போராடிய நவாப் அக்பர் ஷாபாஸ் கான் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.
நவாப் அக்பர் ஷாபாஸ் கான் இறக்கும் வரை, பலுசிஸ்தானின் சுதந்திரத்துக்காக பாகிஸ்தானை எதிர்த்தது மட்டுமல்லாமல், பலுசிஸ்தானின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கான சீன முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவே இருந்தார். அதனாலேயே அவர் கொல்லப்பட்டார் என்றும் சொல்லப் படுகிறது.
நவாப்பைக் கொன்ற பிறகு 2015ம் ஆண்டில் சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கான (CPEC) சீன-பாகிஸ்தான் ஒப்பந்தம் மற்றும் 2016ம் ஆண்டு குவாதர் ஆழ்கடல் துறைமுகத்தின் திறப்பு ஆகியவை ஏற்பட்டன.
பலுசிஸ்தானில் உள்ள இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்குச் சீன நிறுவனங்களுக்குப் பாகிஸ்தான் அனுமதி அளித்திருக்கிறது. சீன நிறுவனங்கள் உள்ளூர் மக்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் மதிப்புமிக்க இயற்கை சொத்துக்களை வெட்டி எடுக்கத் தொடங்கி இருக்கின்றன.
பலுச்சிஸ்தானில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து பலூச் மக்கள் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாகவே, நவாப்பின் 18 வது நினைவு தினத்தை ஒட்டி, பலூசிஸ்தான் விடுதலை படையினர் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் சாலை, ரயில் மற்றும் துறைமுக உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 65 பில்லியன் அமெரிக்க டாலர் திட்டமான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (சிபிஇசி) பாதிக்கும் வகையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்திருக்கிறார்.
பலூசிஸ்தானில் பணியாற்றி வரும் பாகிஸ்தானின் பிற பகுதிகளை சேர்ந்த பஞ்சாபிகள் மற்றும் சிந்திகள் மீது பலூச் விடுதலைப் படையினர் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர் .
மேலும் ,வெளிநாட்டு எரிசக்தி நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பலுசிஸ்தானின் வளங்களைச் சுரண்டும் சீன எரிசக்தி நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் சேர்ந்து சீனாவும் பலூச் மக்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரையிட்டு , அவர்களை கொல்ல பாகிஸ்தான் எடுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவும் உதவியும் செய்து வருகிறது.
சீனாவில் உள்ள ஜின்ஜியாங்க் மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான உய்குர் இஸ்லாமியர்களை ஓடுக்க நீண்ட காலமாகவே சீன அரசு அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது. அது போலவே பாகிஸ்தானும் பலூச் மக்கள் மீது ஒடுக்குமுறைகளை ஏவி வருகிறது. மறைமுகமாகவும் வெளிப்படையாக பலூச் மக்களுக்கு எதிரான போரை சீனாவுடன் சேர்ந்து பாகிஸ்தான் நடத்தி வருகிறது.
அதன் விளைவாக இப்போது பலூசிஸ்தான் விடுதலை படையினரின் எதிர்பாராத தாக்குதலால் இருநாடுகளும் நிலை தடுமாறி இருக்கிறது.
மேலும் இந்நிலை தொடர்ந்தால், ஏற்கெனவே பொருளாதார வீழ்ச்சியில் இருக்கும் பாகிஸ்தானில் உள்நாட்டு போர் தவிர்க்க முடியாததாகி விடும் என்று கூறப்படுகிறது.