மதுரை ஆவின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஊழியர் பணியிடை நீக்கம் – டிடிவி தினகரன் கண்டனம்..

Estimated read time 0 min read

மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஊழியர்களின் மீது அடக்குமுறையை கையாளும் திமுக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

உசிலம்பட்டி தாலுக்கா கோப்பம்பட்டி மொத்த பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து மதுரை ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட பாலில் தண்ணீர் கலப்படம் செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆவின் பால் குளிரூட்டும் மையங்களில் நடக்கும் தண்ணீர் கலப்படம் தொடர்பாக எழுந்த புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆவின் நிர்வாகம், அதற்கு மாறாக தவறை சுட்டிக்காட்டிய ஊழியர் மீது நடவடிக்கை எடுத்து அடக்குமுறையை கையாண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது

மதுரை மாவட்டத்தில் உள்ள 686 கிராம அளவிலான கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு பாலின் தரம் குறித்தோ, அளவு குறித்தோ உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்கப்படாமல் இருப்பதற்கும், இதுபோன்ற தண்ணீர் கலப்பட முறைகேடுகளுக்கும் ஆவின் உயர் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

எனவே, ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடுகளை சுட்டிக்காட்டிய ஊழியர் மீதான பணியிடை நீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஆவின் நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளையும் குளறுபடிகளையும் களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author