சென்னை –மகாளய பட்சத்தில் வரும் மகாபரணியின் சிறப்பு மற்றும் எம தீபம் ஏற்றும் முறைகள் ,பலன்கள் பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மகாபரணி 2024ல் எப்போது ?
மகாபரணி என்பது மகாளய பட்ச காலத்தில் வரக்கூடிய சிறப்பான நாளாக சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. துர் மரணம் மற்றும் விபத்தில் மரணம் ஏற்பட்டவர்களுக்கும் ,திதி தெரியாமல் இருப்பவர்களும் இந்த நாளில் எம தீபம் ஏற்றினால் சிறப்பு என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி மகாபரணி வருகின்றது. மனிதராக பிறந்த நமக்கு சில கடமைகள் இருப்பதாக ஆன்மீகம் கூறுகின்றது. நமது குடும்ப நலனுக்காக இறைவழிபாடும், உலக நன்மைக்காக யாகம் செய்வதும் ,ஆதரவற்றவர்களுக்கு உதவுவது ,நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை திருப்திப்படுத்தும் பித்ரு கடமைகளை செய்வது என சில கடமைகள் கூறப்படுகின்றது.
அதில் பித்ரு காரியங்களை செய்வதற்கு ஏற்ற காலமாக மகாளய பட்ச காலம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. அதிலும் பரணி நட்சத்திரத்தில் வழிபாடு செய்வது பல நன்மைகளைப் பெற்றுத் தரும் என்றும் கூறப்படுகிறது.
எம தீபம் ஏற்றும் முறை மற்றும் பலன்கள் ;
பரணி நட்சத்திரத்திற்கு அதிதேவதையாக விளங்க கூடியவர் எமதர்மராஜா . எட்டு மண் அகல் விளக்குகளைக் கொண்டு நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி இட்டு எட்டு திசைகள் நோக்கியவாறு வீட்டில் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். முடியாதவர்கள் தெற்கு திசை நோக்கி ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் இட்டு பஞ்சுத்திரி போட்டு ஏற்ற வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் பித்ரு தோஷம் ,எம பயம் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அகால மரணம் அடைந்தவர்கள் வீட்டில் இந்நாளில் இந்த பரணி தீபத்தை ஏற்றுவது அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று ஞான நூல்களில் கூறப்பட்டுள்ளது .
குறிப்பாக இந்த பரணி , மகம், சதயம் போன்ற மூன்று நட்சத்திரக்காரர்கள் இந்நாளில் பித்ரு வழிபாடு செய்வது சிறப்பாக கூறப்படுகிறது. எம தீபம் ஏற்றுவதால் எமதர்ம ராஜாவின் மனம் மகிழ்ந்து நரகத்தில் இருக்கும் நம் முன்னோர்கள் சொர்க்கத்திற்கு அனுப்பப்படுகின்றார்கள் என்பது ஐதீகமாக உள்ளது.மேலும் வீட்டில் தூர் மரணம் விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
முன்னோர்கள் மனதிருப்தி அடைந்தால் மட்டுமே நம் வாழ்வில் முன்னேற முடியும். கடவுள் நமக்கு கொடுக்கும் வரங்களை கூட தடுக்கும் ஆற்றல் பித்துருக்களுக்கு உள்ளது என்று சாஸ்திரத்தில் கூறப்படுகின்றது.
எனவே இந்த மகாளய பட்ச காலத்தில் 15 நாட்கள் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் பரணி நட்சத்திர நாளில் எம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் தான தர்மம் கொடுப்பதால் அவர்களின் மனம் குளிர்ந்து நமக்கு பரிபூரண ஆசியை வழங்குவார்கள் .