சென்னை, ஐதராபாத் செல்லும் இரண்டு இண்டிகோ விமானங்களுக்கு விசாகப்பட்டினத்தில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 15 நாட்களில், 200க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. விமான நிறுவனங்கள் எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து மிரட்டல் நிற்கவில்லை. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸின் இரண்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற விமானம் மற்றும் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் வந்த விமானம் ஆகிய இரண்டு விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் உடனடியாக வெடிகுண்டு தடுப்புக் குழுவுடன் இரு விமானங்களிலும் சோதனை நடத்தினர்.
இதேபோன்று திங்கட்கிழமையும் ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் வழியாக மும்பை செல்லும் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஐதராபாத் விமான நிலையத்திற்கு போன் செய்து மிரட்டியதை அடுத்து உஷாரான விமான நிலைய அதிகாரிகள் விசாகப்பட்டினம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விமானிகள் உடனடியாக விமானத்தை வானில் திசை திருப்பி விசாகப்பட்டினத்தில் தரையிறக்கினர்.
பின்னர் விமானத்தில் இருந்த 120 பயணிகள் கீழே இறக்கப்பட்டதால், அவர்கள் அனைவரும் கவலையடைந்தனர். பின்னர் வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சிஐஎஸ்எஃப் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விமானத்தை முழுமையாக சோதனை செய்ததில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர், விமானம் நான்கு மணி நேரம் தாமதமாக மும்பைக்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.