மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.அவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்களுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுரங்கம் அமைக்க மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடிதம் எழுதினோம். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்துள்ளோம்.
நாடாளுமன்றம் கூடும் நேரத்தில் எல்லாம் திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். திமுக அரசு எந்த காலத்திலும் அலட்சியமாக இருந்ததில்லை. ஏலம் விட்டாலும் சரி, ஒருபோதும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என கூறினார்.
இதனிடையே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த தனி தீர்மானம் ஒரு மனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.