தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெற வாய்ப்பு உள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. குறிப்பிட்ட சாதக சூழலினால், காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து, இன்று வலுவடைய வாய்ப்புள்ளது. இது நாளை தமிழ்நாடு மற்றும் இலங்கை கரையை அடையலாம்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது எனவும் கடலோர மற்றும் உள் மாவட்டங்கள், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.