உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் எதிர் கொண்டார். 13 சுற்றுகளின் முடிவில் இருவரும் சம புள்ளிகளுடன் இருந்தனர். சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் 14-வது சுற்று நடைபெற்றது. அதில், 58-வது காய் நகர்த்தலில் டிங் லிரேனை வீழ்த்தி குகேஷ் பட்டம் வென்றார்.
இதன்மூலம் 18 வயதே ஆன குகேஷ் fide உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை படைத்தார். மேலும், இளம் வயது சாம்பியனான கேரி காஸ்பரோவ் சாதனையையும் குகேஷ் முறியடித்தார். சாம்பியன் பட்டத்தை தன் வசப்படுத்தியதும் உணர்ச்சி மிகுதியால் குகேஷ் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
புதிய சாம்பியன் குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை குகேஷ் பதிவு செய்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் குகேஷின் கடின உழைப்பு மற்றும் தளராத உறுதிக்கு கிடைத்த வெற்றி இது என்றும் அவர், பதிவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் வாழ்த்துகளை குகேஷுக்கு தெரிவித்தனர்.