சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் கோவளத்தை மையமாக வைத்து நடத்தப்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் கோவளத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவன ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு தடை விதித்து செங்கல்பட்டு ஆட்சியர் சீல் வைத்தார். சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் ஹெலிகாப்டரை இயக்கியதால், தற்போது மீண்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்குதடை விதிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் கோவளத்தை மையமாக வைத்து நடத்தப்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார்.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை செயல்படுத்தப்படுவதால், கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுலா எந்த அளவுக்கு வளர்ச்சியடையுமோ, அதை விட அதிக சுற்றுலா வளர்ச்சியை, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிப்பதன் மூலம் எட்ட முடியும்.
இதைக் கருத்தில் கொண்டு கோவளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அத்துடன். கிழக்குக் கடற்கரைச் சாலையை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.