குற்றால அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய நல்ல மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பெருமழை காரணமாக குற்றால அருவிகளில் இன்று காலை தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் பாதுகாப்பு பகுதியை தாண்டி தண்ணீர் விழுகின்றது.
இதே போல் ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கரைக்கு யாரும் சென்று விடாதபடி கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது பொங்கல் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறையை அனுபவிக்க குற்றாலம் வந்தனர். இது தவிர சபரிமலை சென்று வரும் பக்தர்களும் குற்றாலம் வந்து இருந்தனர். ஆனால் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.