“நித்யானந்தா ஆசிரமத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்”…

Estimated read time 0 min read

ராஜபாளையம் அருகே உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் நிகழ்ந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கணேசன், 18 ஆண்டுகளுக்கு முன் நித்யானந்தாவின் தீவிர சிஷ்யராக இருந்தவர். அவர் தன் சொந்த ஊரான கோதை நாச்சியாபுரத்தில் உள்ள 4 ஏக்கர் நிலத்தையும், சேத்தூர் அருகே உள்ள 37.75 ஏக்கர் நிலத்தையும் நித்யானந்தா தியான பீடத்திற்கு தானமாக வழங்கியிருந்தார்.

ஆனால் பின்னர் நித்யானந்தாவின் செயல்களில் அதிருப்தியடைந்த அவர், இந்த நிலங்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த இடங்களில் நித்யானந்தா ஆசிரமம் செயல்படக்கூடாது என்றும், அங்கு உள்ள சிஷ்யைகள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த தாசில்தார் ராமசுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆசிரமங்களுக்கு சென்றனர். ஆனால் சிஷ்யைகள் ஆசிரமத்தின் கதவுகளை பூட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் 2 நாட்கள் கெடு விதித்து விட்டு சென்றனர்.

கெடு முடிந்ததும், அதிகாரிகள் மீண்டும் ஆசிரமங்களுக்கு சென்று சிஷ்யைகளை வெளியேற்றினர். அவர்கள் அமைதியாக வெளியேறியதும், அதிகாரிகள் ஆசிரமத்தை பூட்டி சீல் வைத்தனர். ஆனால் அதற்குப் பிறகு, நள்ளிரவில் சில சிஷ்யைகள் மீண்டும் ஆசிரமத்திற்குள் சென்றனர். அவர்கள் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து, இருட்டு அறையில் சிவலிங்கத்தை கட்டிப்பிடித்தபடி புலம்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், “இந்த நிலம் எங்களுக்கே உரியது; அதிகாரிகள் அதை வலுக்கட்டாயமாக பறித்து விட்டனர்; நித்யானந்தருக்கும் எங்களுக்கும் அநீதி நடந்துள்ளது” எனக் கூறியுள்ளனர். தகவல் அறிந்ததும் சேத்தூர் போலீசார் விரைந்து சென்று, அத்துமீறி உள்ளே நுழைந்த சிஷ்யைகளை மீண்டும் வெளியேற்றினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author