“மாற்றுத்திறனாளிகளுக்குப் பெட்ரோல் மற்றும் மின்சார வாகனங்கள்” அமைச்சர் ஜெகதீஸ்வரி சட்டப்பேரவையில் அறிவிப்பு….!! 

Estimated read time 1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மகளிர் நலன் மற்றும் சமூக நலத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயணிக்கும் வகையில் அவர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது மின்சாரத்தால் இயங்கும் சிறப்பு வாகனங்கள் அரசால் வழங்கப்படும் என்று அவர் பேரவையில் அறிவித்தார்.

மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குப் பிரத்யேகச் சிறப்புப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் புதிதாகத் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதனுடன், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களது கல்வியைத் தடையின்றித் தொடர்வதற்காக அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை இனி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மாற்றுத்திறனாளிகளின் பயணங்களை மேலும் எளிமையாக்கும் வகையில், அவர்கள் தங்களின் தனித்துவ அடையாள அட்டையைப் (UDID Card) பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யத் தேவையான அனைத்து வசதிகளும் வழிவகைகளும் செய்து தரப்படும் என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி சட்டப்பேரவையில் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளின் நலனைக் காக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்புகள் பொதுமக்கள் மத்தியிலும் மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

You May Also Like

More From Author