திருமங்கலம் அருகே வாகைகுளத்தில் பிரசித்தி பெற்ற சிலை எடுப்பு திருவிழா – 3000-க்கும் மேற்பட்ட களிமண் சிலைகளுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அய்யனார் கருப்பசாமி திருக்கோவிலில் புரட்டாசி பொங்கல் சிலை எடுப்பு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற சிலைகளை தலைச்சுமையாக சுமந்து ஊர்வலமாக சென்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத கடைசி செவ்வாய், புதன் கிழமைகளில் இத்திருவிழா நடைபெறுவது வழக்கம். பக்தர்கள் தாங்கள் வேண்டிக்கொண்டது நிறைவேறினால், அதனை களிமண் சிலையாக வடித்து கோவிலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதற்காக ஆடிப்பெருக்கு முதல் வாகைகுளம் கண்மாயில் உள்ள களிமண்ணை கொண்டு சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெறும்.
திருவிழாவின் நிகழ்வுகள்:
முதல் நாள் செவ்வாய்க்கிழமை பெண்கள் முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து வந்தனர். மறுநாள் புதன்கிழமை காலையில் சொந்த பந்தங்களுக்கு கறி விருந்து போடப்பட்டது. மதியம் 3 மணிக்கு மேல் ஊரின் மையப்பகுதியில் இருந்து சிலை எடுப்பு ஊர்வலம் தொடங்கியது. வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் முதலில் அம்மன் கோவிலை மூன்று முறை சுற்றி வலம் வந்து, பின்னர் அய்யனார் பாலம் பகுதிக்கு சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த ஆண்டு மழைக்காலம் என்பதால் வயல்வெளிகளில் தண்ணீர் அதிகளவு தேங்கியிருந்தது. பாதைகள் இல்லாததால் பக்தர்கள் வயல் வெளியிலேயே சேற்றில் நடந்து சிரமத்துடன் சிலைகளை சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இருப்பினும் உற்சாகம் குறையாமல் பக்தர்கள் பங்கேற்றனர்.
3000-க்கும் மேற்பட்ட சிலைகள்:
இந்த ஆண்டு மட்டும் 3000-க்கும் மேற்பட்ட சிலைகள் வந்திருந்ததாக விழா குழுவினர் தெரிவித்தனர். பக்தர்கள் தாங்கள் வேண்டிய ஆசிரியர், டாக்டர், ஐ.ஏ.எஸ் அதிகாரி, கலெக்டர், ராணுவ வீரர், போலீஸ், விவசாயி, டிராக்டர், வீடு, பசுமாடு, ஆடு, குழந்தை வரம் வேண்டி குழந்தை சிலை, உடல் வலி தீர கை, கால் சிலை என தங்கள் விருப்பங்களை சிலைகளாக வடித்திருந்தனர்.
பக்தர்கள் பேட்டி:
பூர்வீகம் மதுரை, தற்போது திருப்பூரில் வசிக்கும் சிறுமி தாரணி கூறுகையில், “எங்களுக்கு இருக்கிற ஒரே சாமி அய்யனார்தான். நான் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று சிலை செய்து அய்யனார் காலில் வைக்க வந்துள்ளேன். இதுபோன்ற திருவிழா எங்கேயும் கொண்டாடப்படுவதில்லை. இது 2K கிட்ஸ்க்கு மிகவும் rare. இங்கு ஜாதி, மத பேதமே பார்க்க மாட்டார்கள். ஊர் முழுவதும் ஒற்றுமையாக சேர்ந்து வழிபடுவோம். போன முறை தம்பி வேண்டி சிலை செய்தேன், தம்பியே பிறந்தான்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் இருந்து வந்த இளன் என்பவர் கூறுகையில், “நாங்கள் வருடா வருடம் வருவோம். இந்த திருவிழாவுக்கு வெறும் 30 சதவீதம் பேர்தான் உள்ளூரில் இருந்து வருகிறார்கள். மீதி 70 சதவீதம் பேர் கன்னியாகுமரி, திருச்சி, ராமேஸ்வரம் என வெளியூரில் இருந்து வருகிறார்கள். மனதில் நினைத்து சிலையாக செய்து வைத்தால் கருப்பசாமி நிறைவேற்றி தருவார்” என்றார்.
மற்றொரு பெண் பக்தர் சிவசாம்பவி கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் சிலைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதை எங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறோம். எங்களுக்கு பிறகு அவர்கள் இதை தொடர வேண்டும்” என்றார்.
இத்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் இது ஏற்றத்தாழ்வு இல்லாத, அனைத்து சமூகத்தினரும் ஒன்று கூடும் திருவிழா என பெருமையுடன் தெரிவித்தனர்.
