துருக்கியில் கிடைத்த பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பொக்கிஷம்…!! 

Estimated read time 1 min read

துருக்கி நாட்டின் கடற்கரைப் பகுதியில், சுமார் 4,400 முதல் 4,700 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கப்பல் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தின் பிரமிடுகள் கட்டப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கப்பல், பழங்காலக் கடல் வணிகம் குறித்த முக்கியத் தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. கப்பலின் மரப்பகுதிகள் எஞ்சியிருக்காவிட்டாலும், அதில் எடுத்துச் செல்லப்பட்ட மண் பானைகள் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றில் பொருட்களின் எச்சங்களும் இருந்தது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

துருக்கியின் அன்டால்யா பகுதியில் உள்ள கெகோவா தீவின் அருகே இந்தக் கப்பல் சிதைவுகள் கண்டறியப்பட்டுள்ளன. சுமார் 10 மீட்டர் நீளமுடையதாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் இந்தக் கப்பல், மத்திய தரைக்கடல் பகுதியில் பொருட்களை ஏற்றிச் சென்ற வணிகக் கப்பலாக இருந்திருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு மூன்று பெரிய கல் நங்கூரங்களும், 30-க்கும் மேற்பட்ட பெரிய மண் பானைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பானைகள் ‘ஆம்போரா’ என்று அழைக்கப்படுகின்றன. அவற்றின் வடிவம் மற்றும் அலங்கார முறைகளை ஒப்பிட்டு, கப்பல் ஆரம்பகால வெண்கலக் காலத்தைச் சேர்ந்ததாக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்திய விஷயம், சில மண் பானைகளுக்குள் இன்னும் எச்சங்கள் காணப்பட்டதுதான். அவற்றில் ஆலிவ் எண்ணெய், திராட்சை மது அல்லது மரப் பிசின் போன்ற பொருட்கள் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், அவற்றில் உண்மையில் என்ன எடுத்துச் செல்லப்பட்டது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. பானைகள் முன்பு பயன்படுத்தப்பட்டு மீண்டும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கப்பலின் மரப்பகுதிகள் கிடைக்காததால், அதன் வயதைக் கணக்கிடுவதற்குப் பதிலாக மண் பானைகளின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு காலம் மதிப்பிடப்பட்டுள்ளது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் பயணம் செய்த மாலுமிகள், பொருட்களைத் தயாரித்த கைவினைஞர்கள், அவற்றைக் கப்பலில் ஏற்றியவர்கள் எனப் பழங்கால மக்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள இந்தக் கண்டுபிடிப்பு உதவக்கூடும். கடலுக்கு அடியில் பாதுகாக்கப்பட்டிருந்த இந்தப் பொருட்கள், அக்கால வணிகத் தொடர்புகள் மற்றும் போக்குவரத்து முறைகள் குறித்த புதிய ஆய்வுகளுக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்கப்பட்ட தொல்பொருட்களை அன்டால்யாவில் அமைக்கப்படவுள்ள புதிய கடலடி தொல்லியல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author