அயோத்தி கலசம் காஷ்மீர் கோவிலில் பிரதிஷ்டை!

Estimated read time 1 min read

அயோத்தியில் இருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பழங்கால மார்த்தாண்ட சூரியனார் கோவிலுக்கு அனுப்பப்பட்ட கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியின் இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீராமர் கோவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடக்கவிருக்கிறது.

இதையொட்டி, அயோத்தியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கலசங்கள், நாட்டில் உள்ள முக்கிய இராமர் கோவில்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்ட சூரியனார் கோவிலுக்கு சமீபத்தில் கலசம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து, இக்கலசத்திற்கு சூரியனார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், அங்குள்ள ஸ்ரீராமர் சன்னிதியின் மீது, உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் முன்னிலையில், உள்ளூர் மக்களால் அக்கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர், கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

ஜம்மு காஷ்மீரில் அமைந்திருக்கும் மார்த்தாண்ட சூரியனார் கோவில், 8-ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த பழங்கால கோவிலில் மூலவர் சூரிய பகவான் சன்னிதியுடன், ஸ்ரீராமர் சன்னிதியும் அமைந்திருக்கிறது.

புராதன முக்கியத்துவம் வாய்ந்த இக்கோவில், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author