மார்கழி மாதத்தில் வந்துதித்த ஒரு மாதவம்! – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!

Estimated read time 0 min read

இவ்வுலகத்தில் மிகப்பெரும் படைபலத்தோடு அரசாண்ட அரசர்களின் எண்ணிக்கை பல்லாயிரத்து பல்லாயிரம். தங்களின் அறிவுத் திறனால் உலகில் பல மாற்றங்களைக் கொண்டு வந்த அறிவியலார் பல்லாயிரத்து பல்லாயிரம். தங்களின் கற்பனை சக்தியால், பன்னோக்கு திறமைகளால், உலகையே தங்களின் பிடிக்குள் வைத்திருந்த திறமையாளர்கள் பல்லாயிரத்து பல்லாயிரம். அவர்களெல்லாம் தங்களின் வாழ்நாட்களில் உலகைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து சரித்திர சாதனை படைத்தார்கள். பிறரைவிட தங்களை மேன்மையானவர்கள் என பிரமாண்டமாய் காட்டுவதில் தங்கள் வாழ்க்கையைக் கரைத்துக் கொண்டார்கள்.

ஆனால், இயேசு என்னும் மாமனிதர் அரசாளும் அரியணையில் அவதரிக்கவில்லை. ஆனாலும் அவரே விண்ணிற்கும் மண்ணிற்கும் அரசர். அவரிடம் பிறரை அடக்கி ஆளும் படைக்கருவிகள் இருந்ததில்லை. ஆனாலும் நல்ல மனிதர்களும், சாத்தானும் இயற்கையும் கூட அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டார்கள்.

அள்ளிக் கொடுக்க அவரிடம் பணம் அதிகமாய் இருந்ததில்லை. ஆனாலும் அனைவருக்கும் நிறைவாக உணவளிக்கும் மாபெரும் வல்லமை இருந்தது. பிறருக்கு நலத்திட்டங்கள் வழங்கிட அதிகாரமிக்க பதவிகள் இருந்ததில்லை. ஆனாலும் தான் சந்தித்த அத்தனை பேருக்கும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி சென்ற இடமெங்கும் நலமானவற்றையே செய்தார். வைரங்களும் வைடூரியங்களும் அவரது பெட்டகங்களில் நிறைந்திருந்தது இல்லை. ஆனாலும் மனிதகுல மீட்புக்காக தன்னையே பலியாக்கும் வைரம் பாய்ந்த உடல் இருந்தது.

அடக்கி ஆண்ட அரசர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அவர்களது மறைவுக்குப் பின்னர் மறைந்தே போயின. ஆற்றல் மிகு வாதங்களால் அறிவுக் கண் திறந்த ஆசான்களின் பிறந்த நாட்களும் காற்றோடு காற்றாய் கரைந்தே போயின. இரசவாத வித்தை அறிந்தோரின் பிறப்பின் பெருமையும் அவர்களின் இறப்பில் இறந்தே போயின. ஆனால், இவ்வுலகில் பெத்தலேகம் என்னும் சிற்றூரில், கொட்டும் பனிச்சாரலில், மாட்டுத் தொழுவமதில் யாருமே தனிக்கவனம் செலுத்தாவண்ணம் மிக எளிய வடிவில் ஒதுக்குப்புறமாய் பிறந்த ஒருவரின் பிறப்பு பெருவிழா ஈராயிரம் ஆண்டுகளாக, உலகின் பெரும்பான்மை மக்களால், உலகின் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது என்றால் எத்துணை ஆச்சர்யம்!

இவரது பிறப்பே ஆச்சர்யம்தான்! இவரது பிறப்பைச் சுற்றி நிகழும் அத்தனை நிகழ்வுகளும் உலகம் அதுவரை கண்டிராத பெரும் அதிசய நிகழ்வுகள்தான். இவரது பிறப்பிற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, “கன்னிப் பெண் கருத்தாங்கி ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அவருக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்,” என்று இறைவாக்கினர் எசாயாவால் முன்மொழியப்பட்டது.

பாவத்தில் சிக்குண்ட மனிதகுலம் மீட்டெடுக்கப்பட மீட்பர் ஒருவர் தரப்படுவார் என்ற இறைவாக்கை நம்பி, அந்த மீட்பரின் வருகைக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மாதவமாய் காத்துக் கிடந்தது மனிதகுலம். உரிய காலம் கனிந்து வந்தபோது, மரியா என்னும் கன்னிப் பெண்ணிடம் கடவுள் தனது வானதூதர் கபிரியேலை அனுப்பி, “அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே! பெண்களுள் பேறுபெற்றவர் நீரே,” என வாழ்த்துரைத்து, “தூய ஆவியின் வல்லமையால் அவர் கருத்தாங்கி ஓர் ஆண்மகவைப் பெற்றெடுக்க வேண்டும்,” எனச் சொல்ல, மரியாவும், “இதோ ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்,” என்று சொல்லி கடவுளின் உத்தரவை ஏற்றதால், இயேசு என்னும் இறைமகன் மார்கழித் திங்கள் பத்தாம் நாளில் மங்கா சுடரொளியாய் இம்மண்ணில் வந்துதித்த நன்னாளே இந்நாள்!

இருளடைந்த மாட்டுத் தொழுவத்தில் பிறந்தபோது, இவரை அள்ளி எடுத்து உச்சி முகந்து தாலாட்டுப் பாடிட,மனிதர்கள் யாரும் இல்லை. ஆனாலும் வானலோகத் தூதர்கள், “உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக; உலகினிலே அவர் ஆசி பெற்றோர்க்கு, அமைதி உண்டாகுக,” என்று இசைத்த புகழ்கீதம் இரவினிலே கண் விழித்து கிடை மேய்த்த இடையர்க்கு மீட்புச் செய்தியின் விடையாய் அமைந்திட விண்ணகத் தூதரின் கூட்டத்தோடு, மண்ணக மாந்தராம் இடையரும் இணைந்து, கடவுளுக்கு நன்றி சொல்ல, அந்த இரவுப் பொழுதும் இரம்மியமாய் மாறிப் போனது வியப்பிலும் வியப்பு!

அதோடு முடிந்ததா இயேசுவின் வியத்தகு பிறப்பின் நிகழ்வு? எந்த மனிதரின் பிறப்பிலும் அதுவரை மட்டுமல்ல… அதற்குப் பின்னரும் இதுவரை நிகழ்ந்திராத மாபெரும் அதிசயம் அன்று நிகழ்ந்தது. வானில் தோன்றிய அதிசய விண்மீன் உலகின் தலைசிறந்த ஞானிகளை உலகின் பல திசைகளிலிருந்தும், திசைகூட அறியாத சிற்றூராம் பெத்தலேகம் நோக்கி வழிநடக்க, இந்த விண்மீனே வழிகாட்டியாய் மாறியது.

மெல்கியூர், கஸ்பார், பல்த்தசார் என்னும் மூன்று ஞானிகள் வானத்தின் அதிசய விண்மீனைப் பார்த்தவாறே வழி தடுமாறாமல் எருசலேம் வரை சரியாகவே வந்தார்கள். ஆனால், அவர்கள் ஏரோதின் அரண்மனை முற்றத்தைப் பார்த்து இந்த அரண்மனையில்தான் யூதர்களின் அரசர் பிறந்திருக்க வேண்டும் என்று தங்கள் சொந்த அறிவால் முடிவெடுத்ததால், விண்மீனை இழந்து போனதும் அதிசயமே!

எப்படியோ இதன் வழியாக ஏரோதுவுக்கும் அவன் அறிஞர் கூட்டத்துக்கும் மீட்பின் செய்தி சொல்லப்பட பெத்தலேகமில்தான் மீட்பர் பிறந்திருக்கிறார் எனத் தெள்ளத் தெளிவாய் தெரிந்தும், ஏரோதும் அவன் கூட்டத்தினரும் பாலன் இயேசுவைப் பார்க்க முடியாமல் போனதும் மற்றொரு அதிசயம் அல்லவா!

அரண்மனையை விட்டு வெளியே வந்த ஞானிகளுக்கு மீண்டும் வானத்தின் அதிசய விண்மீன் வழிகாட்டிட பொன், தூபம், வெள்ளைப்போலம் ஆகிய பரிசில்கள் வழங்கி மூன்று ஞானியரும் பாலன் இயேசுவை ஆராதித்த முதன்மை மனிதர்களாய் மாறியதால், உலகமே இன்று இயேசுவை ஆராதிக்கும் நிலை அடைந்தது சொல்லொண்ணா பெருமகிழ்ச்சியே!

இயேசு பிறப்பின் அதிசயங்களை அறிந்து கொண்ட நாமும், ஏரோதும் அவன் கூட்டமும் முடங்கி நின்றது போல் அல்லாமல், மூன்று ஞானியர் போன்று, இயேசுவின் இருப்பிடம் கண்டு அவரை வணங்கி, அவரை ஆராதித்து, அவரின் ஆசியைப் பெற்று மகிழ்வுடன் வாழ்வோம்!

Please follow and like us:

You May Also Like

More From Author