வராகி வழிபட்டு வரம் பெற்ற தலம் !

Estimated read time 0 min read

பனைக் கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்
அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ ? என்று திருநாவுக்கரசு சுவாமிகள் போற்றுகிற கஜ சம்ஹார மூர்த்தியான சிவபெருமான் எழுந்தருளி அருள் கொடுக்கும் தலங்களில் ஒன்றுதான் திருவழுவூர் .

மயிலாடுதுறை குத்தாலம் அருகே உள்ள திருவழுவூர் தேவார வைப்புத் தலமாக போற்றப் படுகிறது .சிவ பெருமானின் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான இத் தலத்தில் கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட வரலாறு நிகழ்ந்துள்ளது.

மகா ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்து போன போதும் இவ்வூர் அழியாமல் நின்றதனால் வழுவூர் எனப் பெயர் பெற்று திரு அடையுடன் திருவழுவூர் என்று அழைக்கப் படுகிறது .

பரகைலாசம் , ஞானபூமி, தாருகாவனம் என்று சிறப்பு பெற்ற இத் தலத்தில் அருள்மிகு இளங்கிளை நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரராக சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள் புரிகிறார் .
வன்னி தலமரமாக விளங்குகின்ற இத்தலத்த்தின் தீர்த்தம் பாதாள கங்கை ஆகும் .

இறைவன் ஞானியர்களுக்கு வீரநடம் ஆடி காட்டிய திருத்தலம் என்பதால் இங்கே சுவாமியின் உள்ளங்கால் பாத தரிசனம் கிடைக்கிறது. யானையின் வால்புறம் சிரசின் மீது தெரிகிறது. திருமேனி ஓங்கார வடிவில் அமைந்துள்ளது. கைவீசி திருவடிகள் முருக்கியவாறு, மடித்து, திருவடியின் உட்புறம் (புறங்கால் பகுதி) தெரியுமாறு நடனமாடுவது அற்புதம். புறங்கால் தரிசனத்தை இங்கு, இம்மூர்த்தியில் கண்டு தொழுது களிக்க முடிகிறது. இத்திருமேனிக்குப் பக்கத்தில் அம்பாளின் திருமேனி அதியற்புதத்தோடு திகழ்கின்றது. ஒரு பாதத்தைச் சற்று திருப்பி, நடந்து செல்ல முயலும் கோலத்தில் உள்ளது. அம்பாளின் இடுப்பில் முருகப்பெருமான் காட்சி தருகின்றார். அவருடைய ஒரு விரல் பக்கத்தில் உள்ள மூர்த்தியைச் சுட்டிக் காட்டும் அமைப்பில் உள்ளது.

 

அபிசார வேள்வியில் தோன்றிய யானையை இறைவனை நோக்கி தாருகா வனத்து ரிஷிகள் ஏவிவிட , சுவாமியோ யானையின் வயிற்றுக்குள் புகுந்தார். உடனே அண்டங்கள் எல்லாம் இருள்மயமானது. அம்பிகை அஞ்சி நடுங்கினாள் . இறைவன் தன்னுள் புகுந்ததை தங்க முடியாத யானைஇக்கோவிலின் தீர்த்த கிணற்றில் வடமேற்கில் விழுந்தது. சிவபெருமான் யானையின் தோல் உரித்து, எழுந்து நின்றான். அம்மைக்கு இறைவன் யானை தோல் உரித்து வந்து நின்ற கோலத்தை முருகப் பெருமான் காட்டியதாக சொல்வதுண்டு .

ஒவ்வொரு மாசி மாதமும் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 9 ஆம் நாளில் கஜ சம்ஹார நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெறும். அதுக்கு அடுத்த நாள் தீர்த்தவாரியும் நடைபெறும் .

இந்த கஜ சம்ஹார மூர்த்தியின் பின்புறம் செய்யப்பட்டுள்ள யந்திர பிரதிஷ்டைக்கு நாள்தோறும் பூஜைகள் நடைபெறுகிறது .

ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு, சுவாமி கருவறையில் உள்ள பஞ்சமுக தீர்த்தத்தில் இருந்து தீர்த்தம் தரப் படுகிறது.

இந்த புனித தீர்த்தத்தினால் அபிசார தோஷங்கள், உடனே விலகும் என்பது உண்மை. இந்தத் திருத்தலத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் , சப்த கன்னியரில் ஒருவரான வாராகி சிவபெருமானை வழிபட்டு வரம் பெற்றத் தலம் .

எனவே அமாவாசை அன்று இக்கோவிலுக்கு வந்து இறைவனை வணங்கி வழிபட்டு தீர்த்தம் அருந்தினால் , பில்லி,சூனியம் என்று சொல்லப்படுகிற அனைத்து வகையான அபிசார தோஷங்களும் விலகும் .

Please follow and like us:

You May Also Like

More From Author