அயோத்தி தரிசனத்துக்கு 50 லட்சம் பேர்: பா.ஜ.க. தீவிர ஏற்பாடு!

Estimated read time 1 min read

மக்களவைத் தேர்தலுக்குள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50 லட்சம் பேரை, அயோத்திக்கு அழைத்துச் சென்று இராமர் கோவிலில் தரிசனம் செய்ய வைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமான அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதாகும். எனினும், இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகாததால், வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.

இதன் பிறகு, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று பா.ஜ.க. 2-வது முறையாக ஆட்சி அமைத்தது. இந்த சூழலில், 2019 நவம்பர் மாதம் அயோத்தி இராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு வெளியானது. இத்தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக வந்தது.

இதையடுத்து, அயோத்தி இராமஜென்ம பூமியில் இராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சியில் மத்திய பா.ஜ.க. அரசு களமிறங்கியது. இதற்காக அறக்கட்டளை ஒன்றும் நியமிக்கப்பட்டு, நிதியும் திரட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாயில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில்தான், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, சுமார் 50 லட்சம் பக்தர்களையாவது அழைத்துச் சென்று அயோத்தி இராமர் கோவிலில் தரிசனம் செய்ய வைத்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. முடிவு செய்திருக்கிறது.

இது தொடர்பாக, புதுடெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 150 பேரை அழைத்து பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்.

இக்கூட்டத்தில், இராமர் கோவில் திறப்பு விழா மற்றும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான வியூகங்கள் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன. அப்போது, திறப்பு விழா, கும்பாபிஷேகம் ஆகியவற்றை மத்திய அரசும், இராமர் கோவில் அறக்கட்டளையும் கவனித்துக் கொள்ளும்.

ஆனால், இதன் பிறகு அயோத்தியை பிரபலமடையச் செய்வது நமகு கைகளில்தான் இருக்கிறது. ஆகவே, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குறைந்தது 1.50 லட்சம் பக்தர்களை அயோத்திக்கு அழைத்துச் செல்லும் பணியில் இறங்க வேண்டும்.

அதேசமயம், அயோத்திக்குச் செல்ல வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், அதற்கான வசதி அவர்களிடம் இருக்காது. அப்படிப்பட்டவர்களை தேடிப்பிடித்து கட்டாயம் அயோத்தி பயணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

முக்கியமாக, இராமர் கோவில் தரிசனத்துக்கு அழைத்து வரும் விஷயத்தில் ஜாதி ரீதியாக எந்தவித பாகுபாடும் பார்க்கக் கூடாது. இது தொடர்பாக, வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை பிரச்சார இயக்கத்தை நடத்த வேண்டும்.

இதன் மூலம், ஒவ்வொரு நாளும் 50,000 பேரை அயோத்திக்கு அழைத்து வந்து தரிசனம் செய்ய வைக்க வேண்டும். அதேபோல, தங்களது சொந்த செலவில் வரும் பக்தர்களுக்கு, தங்குமிடம் உள்ளிட்ட மற்ற ஏற்பாடுகள் அனைத்தையும் பா.ஜ.க.வே ஏற்றுக் கொள்ளும்.

அயோத்திக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, நாடு முழுதும் 430 நகரங்களில் இருந்து, குறிப்பட்ட நாட்களில் மட்டும் அயோத்திக்கு 35 இரயில்கள் பிரத்யேகமாக இயக்கப்படும். ஆகவே, லோக்சபா தேர்தலுக்குள் எப்படியும் நாடு முழுவதும் இருந்து 50 லட்சம் பேரையாவது தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இதற்காக, மாநில அளவில் தொடங்கி, சட்டப்பேரவை தொகுதி அளவு வரை ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பேற்று செயல்படுவார்கள். இதில், முக்கியமான விஷம் என்னவென்றால், அயோத்திக்கு பக்தர்களை அழைத்து வரும் விவகாரத்தில் எக்காரணம் கொண்டும் பா.ஜ.க. கொடியை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர, திறப்பு விழாவை தீபாவளிப் பண்டிகையைப்போல கொண்டாட வேண்டும். கும்பாபிஷேக நாள் மட்டுமல்லாது, வரும் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 2 வாரங்களுக்கு இந்த பிரம்மாண்ட நிகழ்வை கொண்டாடி மகிழ வேண்டும்.

இந்நாட்களில் நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகள், அவரவர் பகுதிகளில் இருக்கும் கோவில்களை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். திறப்பு விழா தினத்தன்று மாலை வேளையில் ஒவ்வொருவர் வீட்டிலும் 5 தீபங்களை ஏற்ற வேண்டும்.

இவை ‘இராம ஜோதிகள்’ என்று அழைக்கப்படும். இவற்றை பக்தர்களும், பா.ஜ.க.வினரும் குடும்பத்துடன் வணங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author