இராமர் கோவில் கும்பாபிஷேகம் : எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்க வாய்ப்பு இல்லை!

Estimated read time 0 min read

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி  பங்கேற்க வாய்ப்பில்லை என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இராமர் கோவில் கும்பாபிஷேகம்  அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  இதுதொடர்பாக இராமர் கோவில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது,இராமர் கோவில் கும்பாபிஷேக  விழாவில் பாஜக மூத்த  தலைவர்கள் எல்.கே.அத்வானி,முரளி மனோகர் ஜோஷி பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிவித்தார். இருவரும் குடும்பத்தின் பெரியவர்கள், அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும்,  அதை இருவரும் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து விழாவிற்கு அழைக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அருண் கோவில், திரைப்பட இயக்குநர் மதுர் பண்டார்கர் மற்றும் பிரபல தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர்  வாசுதேவ் காமத், இஸ்ரோ இயக்குநர் நிலேஷ் தேசாய் மற்றும் பல பிரபலங்கள் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் ராய் கூறினார்.

விழாவிற்கு சுமார் 4,000 புனிதர்களும் 2,200  விருந்தினர்களும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.  அயோத்தியில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விருந்தினர்கள் தங்குவதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திரு ராய் கூறினார். இது தவிர, பல்வேறு மடங்கள், கோவில்கள் மற்றும் வீடுகள்  மூலம் 600  அறைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, ஜனவரி 24 முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை சடங்கு மரபுகளின்படி நடைபெறும் என்றும்,  ஜனவரி 23ஆம் தேதி கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author