உலகிலேயே மிகப்பெரிய சூரத் வைர பங்குச்சந்தை: பிரதமர் மோடி நாளை திறக்கிறார்!

Estimated read time 1 min read

குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வைர பங்குச்சந்தையான “சூரத் டயமண்ட் போர்ஸ்” அலுவலகத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத் மாநிலம் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்குதான் பட்டை தீட்டப்படுகின்றன. இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65,000-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எனவே, வைரத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் விதத்தில், சூரத் வைர நகரில் 35 ஏக்கர் பரப்பளவில் 3,400 கோடி ரூபாய் செலவில் “சூரத் டயமண்ட் போர்ஸ்” (சூரத் வைர பங்குச்சந்தை) என்கிற மிகப்பெரிய அலுவலகம் கட்டப்பட்டிருக்கிறது.

தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக கட்டப்பட்டிருக்கும் இக்கட்டடங்களை இணைக்க முதுகெலும்பு போல ஒரு மையக் கட்டடமும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த அலுவலக கட்டட வளாகத்தின் மொத்த தளங்களின் பரப்பளவு 70.10 லட்சம் சதுர அடியாகும்.

இது, சுமார் 80 ஆண்டுகளாக உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டடமாக இருக்கும் அமெரிக்காவின் பென்டகனை விட மிகப்பெரிய கட்டடமாகும். இங்கு, 175 நாடுகளைச் சேர்ந்த 4,200 வர்த்தகர்கள் தங்கும் வசதி இருக்கிறது. மேலும், இவர்கள் பாலீஷ் செய்யப்பட்ட வைரங்களை வாங்க சூரத்திற்கு வருவார்கள்.

அதேபோல, உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் வைரம் வாங்குபவர்கள் சூரத்தில் வர்த்தகம் செய்வதற்கான உலகளாவிய தளத்தைப் பெறுவதால், சுமார் 1.5 லட்சம் பேர் வர்த்தக வசதி மூலம் வேலை பெறுவார்கள். இதன் கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பே இங்கு மொத்தமுள்ள 4,700 அலுவலகங்களையும் வைரத் தொழில் நிறுவனங்கள் வாங்கி விட்டன.

இக்கட்டடத்தை டெல்லியைச் சேர்ந்த கட்டடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் சுமார் 4 ஆண்டுகள் தீவிர முயற்சிக்குப் பிறகு கட்டி முடித்திருக்கிறது.

இக்கட்டடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். இக்கட்டடம் குறித்து பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கடந்த 80 ஆண்டுகாலமாக மிகப்பெரிய அலுவலகமாக இருந்த பென்டகனை சூரத் டயமண்ட் போர்ஸ் தற்போது முந்தி இருக்கிறது.

சூரத் டயமண்ட் போர்ஸ் சூரத் வைரத் தொழிலின் ஆற்றல் மற்றும் வளர்ச்சியைக் காட்டுகிறது. இது இந்தியாவின் தொழில் முனைவோர் மனப்பான்மைக்கு ஒரு சான்றாகவும் உள்ளது. இது வர்த்தகம், புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்புக்கான மையமாக செயல்படும். மேலும், நமது பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author