ஓமன் சுல்தானுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை!

Estimated read time 1 min read

இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில், ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று புதுடெல்லியை வந்தடைந்தார். அவருடன் அந்நாட்டின் மூத்த அமைச்சர்களும், உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் வந்தது. அவர்களுக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று மாலை சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை சந்தித்தார். இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியா – ஓமன் மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த ஓமன் சுல்தானின் வழிகாட்டுதலை மதிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், இன்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஓமன் சுல்தானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது, குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரும் ஓமன் சுல்தானை சந்திக்கிறார். பின்னர், அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் மதிய விருந்து அளிக்கப்படுகிறது.

இதன் பிறகு, டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தை சுல்தான் ஹைதம் பின் தாரிக் பார்வையிடுகிறார். ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் இந்தியாவுக்கான முதல் அரசுமுறைப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இது இந்தியாவுக்கும், ஓமனுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தவும்.

அதோடு, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இப்பயணம் உதவும். மேலும், இந்தியாவுக்கும் ஓமன் சுல்தானகத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை இது குறிக்கிறது. தவிர, ஓமன் சுல்தானின் இந்திய சுற்றுப் பயணமானது இருநாடுகளிடையேயான பிராந்திய நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு வழிகோலும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதற்கு முன்பு, முன்னாள் இந்திய பிரதமர்கள் ராஜீவ் காந்தி, பி.வி.நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் ஓமனுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018-ல் ஓமன் பயணம் சென்றது இரு நாடுகளிடையேயான உறவில் மைல்கல்லாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author