குஜராத் படகு விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Estimated read time 1 min read

குஜராத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 12 மாணவர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அம்மாநில உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறது.

குஜராத் மாநிலம் வதோதராவில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியைச் சேர்ந்த 4 ஆசிரியா்கள் தலைமையில் 30 மாணவர்கள் வதோதராவின் புறநகர் பகுதியில் உள்ள ஹர்னி ஏரிக்கு கடந்த 18-ம் தேதி சுற்றுலா சென்றனர். அங்கு, 34 பேரும் ஒரே படகில் பயணம் செய்து ஏரியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்தது. இதனால், படகில் இருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் ஏரியில் விழுந்து தத்தளித்தனர். இவர்களது கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஏரியில் குதித்து காப்பாற்ற முயன்றனர்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினரும், பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், 18 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மீதி 12 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக குஜராத் காவல் துறையினர் 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். இந்த சூழலில், மேற்கண்ட விபத்து தொடர்பான விவகாரத்தை குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுனிதா அகர்வால், தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, “படகில் பயணித்த குழந்தைகளுக்கு உயிர் காக்கும் மிதவை ஆடைகள் கூட வழங்கப்படவில்லை. சிறிதும் பொறுப்பற்று இவ்வாறு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

ஆகவே, ஜனவரி 29-ம் தேதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும். அதற்குள் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author