சீனா, பாக்.கிற்கு “செக்”: இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்த ஈரான் துறைமுகம்!

Estimated read time 1 min read

ஈரானின் சபாகர் துறைமுகத்தை 10 ஆண்டுகள் இயக்குவதற்கான குத்தகை ஒப்பந்தத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. முதன்முறையாக ஒரு வெளிநாட்டு துறைமுகத்தின் நிர்வாகத்தை இந்தியா கைப்பற்றி வரலாற்றுச் சாதனை செய்துள்ளது. ஏன் இந்த ஒப்பந்தம் ஒரு இந்தியாவுக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த திங்கள் கிழமை இந்தியாவின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஈரானுக்கு சென்று , அடுத்த 10 ஆண்டுகளுக்கு சபஹர் துறைமுகத்தை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

ஈரானியத் துறைமுகமானது ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா மற்றும் பரந்த ஐரோப்பிய பரப்புக்கு இந்தியாவின் முக்கிய இணைப்பு வழியாக கருதப்படுவதால், இந்த ஒப்பந்தத்தால், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா மற்றும் யூரேசியாவுடன் இணைக்கும் முக்கிய பிராந்திய இணைப்பு மையமாக இந்தியா மாறியிருக்கிறது என்று உலக நாடுகள் கருதுகின்றன.

சபகர் திட்டத்தில் உள்ள இரண்டு முக்கிய துறைமுகங்கள் ஷாஹித் பெஹெஷ்டி மற்றும் ஷாஹித் கலந்தரி ஆகும்.

சபஹர் துறைமுகம் ஈரானின் முதல் ஆழ்கடல் துறைமுகம் ஆகும். ஓமன் வளைகுடாவின் முகப்பில், ஈரானின் பாகிஸ்தானுடனான எல்லைக்கு மேற்கில், சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது.

இந்த துறைமுகம், பாகிஸ்தானில் சீனாவால் உருவாக்கப்பட்ட போட்டித் துறைமுகமான குவாதர் வரை நீண்டிருக்கிறது.

ஏற்கெனவே இந்தியாவின் முதலீடு, ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தில் மட்டுமே உள்ளதால், இப்போது , இந்த துறைமுகத்தின் நிர்வாகம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் செயத் இப்ராஹிம் ரைசி இடையே காசா நெருக்கடி குறித்து பேசியபோது, ​​இந்த துறைமுகம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு ஈரானுக்குச் சென்ற பிரதமர் மோடி, சஹ்பஹர் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்ட நிலையில், ஷாஹித் பெஹெஷ்டி முனையத்தை மேம்படுத்த ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் முத்தரப்பு ஒப்பந்தமும் செய்யப்பட்டது.

2017ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தின் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. அதே ஆண்டில் இந்தியா முதல்முறையாக ஆப்கானிஸ்தானுக்கு சபகர் வழியாக கோதுமை ஏற்றுமதி செய்தது.

பின்னர் 2018 இல், அப்போதைய ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி இந்தியாவுக்கு வந்த போது, ​​இந்தியாவின் பங்கை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டு ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டது.

அதே ஆண்டு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெஹ்ரானுக்குச் சென்று இந்த விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வழிவகை செய்தார்.

அதன் விளைவாக , 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியா போர்ட் குளோபல் லிமிடெட் (IPGL) நிறுவனம், ஷாஹித் பெஹெஷ்டியில் நிர்வாகத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றியது.

2024 மக்களவை தேர்தல் நடந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மேற்கு ஆசியப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் முக்கிய வர்த்தகப் பாதைகள் எல்லாம் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், இந்த துறை முகத்தை இந்தியா கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பது ஒரு வரலாற்று சாதனை என்றே பிற நாடுகள் பார்க்கின்றன.

ஒரு வெளிநாட்டு துறைமுகத்தின் நிர்வாகத்தை இந்தியா வசப்படுத்துவது இதுவே முதல்முறை என்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.

பாகிஸ்தானை சார்ந்திருக்காமல் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுக்கான இந்தியாவின் வர்த்தக தொடர்பு பரிவர்த்தனைகள் இனி எளிதாகும் என்றும், சர்வதேச வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து வழித்தடத்துடன் (INSTC) சபகரை ஒருங்கிணைக்கும் திட்டங்களும் இதில் அடங்கியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

INSTC என்பது 7,200-கிமீ நீளமுள்ள பல்வழி போக்குவரத்து திட்டமாகும். இது இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், ஆர்மீனியா, அஜர்பைஜான், ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவில் சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான வழிவகைகளை செய்கிறது.

மிக சிக்கனமான செலவில் இந்தியாவில் இருந்து , மத்திய ஆசிய நாடுகளுக்கு சரக்குகளை அனுப்புவதில் இந்த சபகர் துறைமுகம் ஒப்பந்தத்தால் இந்தியா மிக முக்கியமான இப்பகுதிக்கான வணிக போக்குவரத்து மையமாக மாறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

பாகிஸ்தானைக் கடந்து செல்லும் மாற்றுப் பாதையை இந்தியாவுக்கு வழங்குவதால், மேற்கத்திய பொருளாதாரத் தடைகளில் சிக்கித் தவிக்கும் ஈரானின் பொருளாதார சரிவு சரிசெய்யப்படும் என்றும் நம்பப்படுகிறது.

(Pakistan’s Gwadar Port )பாகிஸ்தானின் குவாதர் துறைமுகம் மற்றும் சீனாவின் (China’s Belt and Road Initiative (BRI)) பெல்ட் அண்ட் ரோடு பிஆர்ஐ ஆகியவற்றுக்கு சபகர் துறைமுகம் ஒரு மாற்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பிஆர்ஐயின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகத்தை சீனா உருவாக்கத் தொடங்கிய பிறகே இந்தியாவுக்கான அச்சுறுத்தல் அதிகமானது. அதனை கட்டுப்படுத்தவே, சபகர் திட்டத்தில் முழுவதுமாக கவனம் செலுத்த தொடங்கியது இந்தியா.

இப்போது ஈரானின் ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தை கைப்பற்றி இருப்பது, இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளில் ஒரு மைல்கல் என்றால் மிகையாகாது.

Please follow and like us:

You May Also Like

More From Author