ஜோதிமணி உட்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

Estimated read time 0 min read

நாடாளுமன்ற பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக, மக்களவையில் அமளியில் ஈடுபட்ட ஜோதிமணி உட்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று, பார்வையாளர்கள் 2 பேர் அத்துமீறி எம்.பி.க்கள் பகுதிக்குள் குதித்து கலர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அவையில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இருவரும் கைது செய்யப்பட்டாலும், பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலையில் மக்களவை கூடியதும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து பேசுகையில், “மக்களவையில் நடந்த சம்பவத்திற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாம் அனைவரும் பார்வையாளர்களுக்கான பரிந்துரை கடித்தத்தை கவனமாக வழங்க வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று கூறினார்.

அப்போது, பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி எதிர்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் எம்.பி.க்களின் பெயர்களை குறிப்பிட்டு, அமளில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

ஆனாலும், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் 2 மணிக்கு அவை கூடியது. அப்போதும், தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உட்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இது அவை நடவடிக்கைக்கு இடையூறாக இருந்தது.

இதையடுத்து, அவை நடவடிக்கைக்கு இடையூறாகச் செயல்பட்டதாகக் கூறி, ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன், ஹிபி இடன், டீன் குரியகோஸ் ஆகிய 5 எம்.பி.க்களையும் சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்தார். இவர்கள், நடந்துவரும் குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author