டிடி தமிழ் என்ற பெயரில் பொதிகை தொலைக்காட்சி! – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Estimated read time 0 min read

தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி புதுப்பொலிவுடன் டிடி தமிழ் என்ற பெயரில் ஒளிபரப்பைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

நாட்டின் பொதுசேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் கீழ் இயங்கும்   தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி புதிய தொடர்கள், புதிய நிகழ்ச்சிகள், புதிய  வடிவமைப்பில் செய்திகள் ஆகியவற்றுடன் இன்று முதல் (19.01.2024) டிடி தமிழ் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் ஒளிபரப்பை தொடர உள்ளது.

இதனை பிரதமர் நரேந்திர மோடி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியின் போது நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

பொதிகை என்ற பெயரில் இதுவரை ஒளிபரப்பு சேவையை வழங்கி வந்த இத்தொலைக்காட்சியின் பாரம்பரியம் குன்றாமல், அதேவேளையில் புதிய எண்ணங்கள், புதிய   வண்ணங்கள் என்ற லட்சியத்துடன் புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்கிறது.

இவற்றில் நான்கு பொழுதுபோக்கு நெடுந்தொடர்கள், திரைப்படங்கள், திரைப்படபாடல்களை கொண்ட ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி ஆகியவை அடங்கும்.  புதிய அம்சங்களுடன் டிடி தமிழ் தொலைக்காட்சியை தொடங்குவதற்காக பிரசார் பாரதி சார்பில் ரூ.39.71 கோடி செலவு  செய்யப்படுகிறது.

வழக்கமான காலை 8 மணி செய்திக்குப் பின்னர், காலை 9 மணி, 10 மணி, நண்பகல் 12 மணி, பிற்பகல் 2 மணி, 3 மணி, 4 மணி ஆகிய நேரங்களில் தலா ஐந்து நிமிட விரைவுச்செய்திகள் புதிதாக இடம் பெற உள்ளன.

ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 5 மணி ஆகிய செய்தி அறிக்கைகள் தொடர்ந்து தலா 30 நிமிடங்களுக்கு இடம்பெறும்.

இரவு 7 மணி செய்தி இனி ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரத்திற்கு பல்வேறு புதிய அம்சங்களுடன் ஒளிபரப்பாகும். இதில் அந்தந்த நாளுக்கான முக்கிய செய்திகள், சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களின் கருத்துகள், தேசிய, மாநில, சர்வதேச செய்திகள், பொருளாதாரம், விளையாட்டு, பல்சுவை, வானிலை போன்ற தகவல்கள் விரிவாக இதில் இடம்பெறும்.

இரவு 10 மணி செய்தி முழுவதும் விரைவுச்செய்தியாக ஒளிபரப்பாகும்.  வார நாட்களில் இடம்பெறும் ஒரு மணிநேர மக்கள் மேடை விவாத நிகழ்ச்சி, இனி மாலை 6 மணிமுதல் இரவு 7 மணி வரை ‘எதிரும் புதிரும்’ என்ற தலைப்பில் இடம்பெறும்.

நான்கு புதிய பொழுதுபோக்கு நெடுந்தொடர்கள் டிடி தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெறவுள்ளன.  ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் வழங்கும் ‘தாயம்மா குடும்பத்தார்,’   விகடன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து அளிக்கும் ‘பட்ஜெட் குடும்பம்,’ சுரேஷ் கிருஷ்ணா புரொடக்‌ஷென்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘சக்தி ஐ.பி.எஸ்.’ ஆகிய தொடர்கள் ஒவ்வொரு நாளும் இரவில் ஒளிபரப்பாகவுள்ளன.

மேலும் வார நாட்களில் கிருஷ்ணசுவாமி அசோசியேட்ஸ் தயாரித்துள்ள ‘மகாகவி பாரதி’ என்ற தொடர் இடம்பெறவுள்ளது.  இது தவிர சமையல், சுற்றுலா, ஆயுர்வேதா, வீட்டு மருத்துவம் என பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும்.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் தமிழ் கலாச்சாரத்தை எவ்வாறு பேணி வளர்க்கிறார்கள் என்பதை சித்தரிக்கும் ‘தமிழ் பாலம்’ என்ற நிகழ்ச்சி டிடி தமிழ் தொலைக்காட்சியால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகவுள்ளது.

மேலும் கனரா வங்கி நிதியுதவியுடன் ‘ஸ்டார்ட் அப் ஹேண்ட்ஷேக்’ என்ற புத்தாக்க  தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியும் புதிதாக இடம்பெறும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.  பழங்கால தமிழ் இலக்கியமான திருமந்திரம் தொடர்பான தினசரி நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகவுள்ளது.

பொதுச் சேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி சார்பில் தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் உட்பட எட்டு மாநிலங்களில் 12 புதிய பண்பலை வானொலி ஒலிபரப்பு கோபுரங்களையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (19.01.2024) தொடங்கி வைக்கிறார்.

மேலும் 12 மாநிலங்களில் நிறுவப்பட்டுள்ள 26 பண்பலை வானொலி ஒலிபரப்பு கோபுரங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.  ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள தூர்தர்ஷனின்  நான்கு உயர் சக்தி ஒலிபரப்பு கோபுரங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.  இவற்றுக்கான மொத்த திட்ட மதிப்பீடு ரூ.239 கோடியே 9 லட்சமாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author