நல்லாட்சி தினத்தில் தொழிலாளர்களுக்கு நீதி: பிரதமர் மோடி பெருமிதம்!

Estimated read time 1 min read

மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹுகும்சந்த் மில் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய சுமார் 224 கோடி ரூபாய்க்கான காசோலையை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர் சங்கத்தின் தலைவர்களிடம் வழங்கினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஹுகும்சந்த் மில் செயல்பட்டு வந்தது. இந்த மில் நஷ்டத்தில் இயங்கியதால், 1992-ம் ஆண்டு திடீரென மூடப்பட்டது. இதையடுத்து, தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு கேட்டு, ஹுகும்சந்த் மில் தொழிலாளர்கள் நீண்ட சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, பா.ஜ.க. தலைமையிலான மத்தியப் பிரதேச அரசு, சமீபத்தில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இது நீதிமன்றங்கள், தொழிலாளர் சங்கங்கள், மில் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சம், அனைத்து நிலுவைத் தொகைகளையும் மத்தியப் பிரதேச அரசாங்கம் செலுத்தி, ஆலை நிலத்தை கையகப்படுத்தி, அங்கு குடியிருப்பு மற்றும் வணிக வளாகமாக மேம்படுத்துவதை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாடு முழுவதும் இன்று நல்லாட்சி தினம் கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில், ஹுகும்சந்த் மில் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய சுமார் 224 கோடி ரூபாய்க்கான காசோலையை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொழிலாளர் சங்கத்தின் தலைவர்களிடம் வழங்கினார்.

காணொலி வாயிலாக நடந்த இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நல்லாட்சி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்காக உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இன்று சுமார் 224 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் இந்தப் பணம் நமது தொழிலாளர்களைச் சென்றடையும்.

நீங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இப்போது உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. தொழிலாளர்களுக்கு நீதி கிடைத்த நாளாக இந்தூர் மக்கள் டிசம்பர் 25-ம் தேதியை நினைவில் கொள்வார்கள்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாள் மற்றும் நல்லாட்சி தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இன்றைய நிகழ்வு சிறப்பு வாய்ந்தது. மத்தியப் பிரதேசத்தின் மீது வாஜ்பாய் கொண்ட அன்பை நாம் அனைவரும் அறிவோம். ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த மத்தியப் பிரதேச அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகிய 4 ஜாதிகள் எனக்கு மிகவும் முக்கியம்” என்றார்.

மேலும், நிகழ்ச்சியில் ​​இந்தூர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் கார்கோன் மாவட்டத்தின் சாம்ராஜ் மற்றும் அசுகேடி ஆகிய கிராமங்களில் நிறுவப்படும் 60 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 308 கோடி ரூபாய் செலவில் இந்த புதிய சூரிய மின் நிலையம் நிறுவப்படுவதால், இந்தூர் மாநகராட்சிக்கு மாதம்தோறும் சுமார் 4 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்க உதவும்.

சோலார் ஆலை கட்ட நிதியுதவிக்காக, இந்தூர் முனிசிபல் கார்ப்பரேஷன் 244 கோடி ரூபாய் மதிப்பிலான பசுமை பத்திரங்களை வழங்கியது. பசுமைப் பத்திரங்களை வெளியிடும் நாட்டின் முதல் நகர்ப்புற அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

பசுமைப் பத்திரம் என்பது மத்திய அல்லது மாநில அரசு அல்லது நகர்ப்புற அமைப்புகளால் திரட்டப்பட்ட நிதி. இது காலநிலை அல்லது சுற்றுச்சூழல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு செலவிடப்படும் என்ற உறுதிப்பாட்டுடன் முதலீட்டாளர்களிடம் இருந்து கடன் வாங்கும் கருவியாகும்.

இது 29 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சுமார் 720 கோடி ரூபாய் மதிப்பில் சந்தா செலுத்தியதால் அற்புதமான வரவேற்பைப் பெற்றது. இது வழங்கப்பட்ட ஆரம்ப மதிப்பை விட 3 மடங்கு அதிகம் சேர்ந்திருக்கிறது.

இதுகுறித்து மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் கூறுகையில், “நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 4,800 ஹுகும்சந்த் மில் தொழிலாளர்களுக்கு இன்று நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்களில் அரசு அக்கறையுடன் செயல்படுகிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்திருக்கிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author