நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: அதிக கேமராக்கள் பொருத்தம்!

Estimated read time 1 min read

தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கூடுதல் கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, கடுமையான பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், நாடாளுமன்றத்துக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது, நாடாளுமன்றத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, நாடாளுமன்றத்துக்குள் செல்பவர்கள் முதலில் வரவேற்பு அறையில் தங்களை பதிவு செய்ய வேண்டும். அப்போது, அவர்களிடம் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படும்.

இதன் பிறகு, பார்வையாளர்கள் அடையாள அட்டை, கைப்பை, போன் போன்றவை ஆய்வு செய்யப்படும். அதேசமயம், போன் மற்றும் பைகளை உள்ளே எடுத்துச்செல்ல அனுமதிக்க மாட்டார்கள். 2-வது கட்ட பாதுகாப்பில், பார்வையாளர்களின் நுழைவுச் சீட்டு ஸ்கேன் செய்து ஆய்வு செய்யப்படும்.

மேலும், பார்வையாளர்கள் அடையாள அட்டை உண்மையானதுதானா என்பதும் பரிசோதிக்கப்படும். மீண்டும் மெட்டல் டிடெக்டர் மூலம் பார்வையாளர்களை சோதனை செய்வார்கள். 3-வது கட்டமாக நாடாளுமன்றத்தின் முக்கிய நுழைவு வாயிலுக்கு பார்வையாளர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அங்கும் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்யப்படும். பார்வையாளர்களின் நுழைவுச் சீட்டு மீண்டும் கடுமையாக ஆய்வு செய்யப்படும். 4-வது கட்டமாக பார்வையாளர்கள் நாடாளுமன்ற மாடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதற்கு முன்னதாக மீண்டும் ஒருமுறை பார்வையாளர்கள் சோதிக்கப்படுவார்கள்.

இந்த 4 கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கடந்துதான் நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் செல்ல முடியும். இந்த 4 கட்ட சோதனைகளையும் தாண்டி 2 இளைஞர்கள் புகைக் குண்டுகளை கொண்டு சென்று தாக்குதல் நடத்தியதுதான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே, நாடாளுமன்றத்துக்கான பாதுகாப்பு இன்று முதல் மேலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, இந்த கூட்டத்தொடரில் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதோடு, மக்களவை, மாநிலங்களவையின் பார்வையாளர் மாடமும் மூடி சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, பார்வையாளர்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்குவதும் தடை செய்யப்பட்டிருக்கிது. நாடாளுமன்ற வளாகத்திலும், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் பாதுகாவலர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளில் இனி எந்தக் குறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில புதிய பாதுகாப்பு அம்சங்களும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அதன்படி, விமான நிலையங்களைப் போல முழு உடல் பரிசோதனைக்கான ஸ்கேனர் கருவிகள், இயந்திரங்கள் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது.

தவிர, பார்வையாளர்கள் அனைவரையும் இனி முழுமையாக சோதிக்க, கூடுதல் பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எம்.பி.க்கள் இருக்கைக்கும், பார்வையாளர்களின் மாடத்துக்கும் இடையே கண்ணாடி தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், நாடாளுமன்றத்துக்குள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் நுழைய தனி வழி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற ஊழியர்கள், செய்தியாளர்கள் தனி வழியில் செல்ல முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, அமைச்சர்களின் உதவியாளர்களையும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, நாடாளுமன்றத்துக்குள் வருபவர்களை கண்காணிக்க, ஏற்கெனவே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலம், நாடாளுமன்றத்துக்குள் வரும் ஒவ்வொருவரையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author