மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும்! – மத்திய அமைச்சர் வி கே சிங்

Estimated read time 0 min read

நெல்லையில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி கே சிங் பங்கேற்றார்.

நெல்லை சி.என்.கிராமம், ராஜவள்ளிபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர்
வி.கே.சிங்  கலந்து கொண்டார்.

மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய காலண்டரை பொதுமக்களிடம் வழங்கிய அமைச்சர், பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், கடனுதவிகளையும் வழங்கினார்.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் என்றும், இத்திட்டங்களில் இதுவரை சேராத மக்கள், சேர்ந்து பயனடைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வி கே சிங்,

அனைத்து உதிரி பாகங்களும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே ஒரு வாகனம் சிறப்பாக இயங்கும் என்பதைப் போல மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும் என்று கூறினார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், நாட்டில் உள்ள 18 முக்கிய மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்றுள்ளது என்று கூறினார்.  தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப்பணிகள் விரைவில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முன்னோடி வங்கியின் பொது மேலாளர் கணேச மணிகண்டன் மற்றும்  வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை வங்கிகள், தபால்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author