வெங்கையா நாயுடு, நடிகர் சிரஞ்சீவி உட்பட 132 பேருக்கு பத்ம விருது: பிரதமர் மோடி வாழ்த்து!

Estimated read time 1 min read

முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் சிரஞ்சீவி உட்பட 132 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. விருது பெற்றவர்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இப்பட்டியலில் 5 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 110 பத்மஸ்ரீ விருதுகள் இடம்பெற்றிருக்கின்றன. இவ்விருது பெற்றவர்களில் 30 பேர் பெண்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் சிரஞ்சீவி, நடிகை வைஜெயந்தி மாலா பாலி, பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோர் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். தவிர, சமூக ஆர்வலர் பிந்தேஷ்வர் பதக், மரணத்திற்குப் பிறகு பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகி இருக்கிறார்.

அதேபோல, உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி எம்.பாத்திமா பீவி, மறைந்த நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் ஆகியோருக்கு மரணத்திற்குப் பிறகு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, பாடகி உஷா உதுப், தொழிலதிபர் சீதாராம் ஜிண்டால், இசையமைப்பாளர் பியாரிலால் ஷர்மா, ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியு உள்ளிட்டோர் பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பத்ம விருது பெற்றவர்களில் இந்தியாவின் முதல் பெண் யானை பாகன் பர்பதி பாருவா, பழங்குடி சுற்றுச்சூழல் ஆர்வலர் சாமி முர்மு மற்றும் சமூக சேவகர் சங்கதாங்கிமா ஆகியோர் அடங்குவர்.

இதையடுத்து, பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் அவர்களின் பங்களிப்பை இந்தியா மதிக்கிறது. அவர்கள் தங்கள் சிறப்பான பணிகளால் மக்களை ஊக்குவிக்கட்டும்” என்று கூறியிருக்கிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author