சிங்கப்பூரில் பரவி வரும் புது வகை கொரோனா!

Estimated read time 1 min read

உலகையே ஒரு வழியாக்கிய, கொரொனா வைரஸ் புது புது வடிவமெடுத்து இன்னமும் உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

இப்போது, சிங்கப்பூரில் மீண்டும் புதிய வகை கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் மக்கள் அவசியம் முக கவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நோய் வருவதும், அதைக் குணப்படுத்துவதும், சாதாரண மருத்துவ நிகழ்வுதான் என்றாலும், அந்த நோய் தொற்று நோயாக இருக்கும் பட்சத்தில், அது பரவாமல் தடுப்பது மிகவும் முக்கியமானது.

புதுவகையான நோய் என்றால் , நோய்க்கான காரணம் என்ன? எதனால் அந்தநோய் வந்தது ? என்பதைக் கண்டறிந்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்குள் நோய்க்குப் பலர் பலியாகி விடுவார்கள்.

அப்படி ஒரு ஆபத்தான நோய் தான் கொரோனா. 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் உருவாகி, சிங்கப்பூருக்கு வந்து அதன் பின் உலகம் முழுவதும் பரவிய கொரோனா நோய் உலகையே தலைகீழாக புரட்டிப் போட்டது. மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்தது.

பல லட்சக் கணக்கான மக்கள் இறந்து போன நிலையில், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப் பட்டது என்றாலும் , அந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் இப்போது சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.

விடாத நோய் போல இந்த கொரோனா வைரஸ் ஆண்டுக்கு ஆண்டுக்கு, புதிது புதிதாக உருவம் மாறி வந்து மக்களைப் பாதிக்கிறது.

முதலில், கோவிட் – 19 வந்தது. அடுத்து JN வைரஸ் என்றானது .இப்போது கொரொனா வைரஸ் KP 1, KP 2 என்கிறார்கள்.

இதுவும் சீனாவில் இருந்து தான் இறக்குமதி ஆகி இருக்கிறது. சிங்கப்பூரில் இப்போது இந்த தொற்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் கடைசி வாரத்தில் 13,700 பேர் பாதிக்கப் பட்டிருந்த நிலையில், மே மாதம் 5 ஆம் தேதியில் இருந்து 7 நாட்களுக்குள் கிட்டத்தட்ட 30000 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சராசரியாக ஒருநாளைக்கு 250 பேருக்கு மேல் புதுவகை கொரொனாவால் பாதிக்கப் படுகின்றனர் என்று சிங்கப்பூர் அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தொடக்க நிலையில் உள்ள புதிய கொரொனா அலை, வரும் ஜூன் மாதத்துக்குள் உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

60 வயதுக்கு மேலுள்ள முதியவர்களை அதிகம் பாதிக்கும் என்பதால் அவர்கள் எச்சரிக்கையுடம் இருக்கவேண்டும் என்றும், கோவிட்-19 தடுப்பூசியை கடந்த 12 மாதங்களில் எடுத்துக் கொள்ளாதவர்கள்,உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசு வலியுறுத்தி இருக்கிறது.

சமூக கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தனிமை படுத்தல் போன்ற நடவடிக்கைகளை கொண்டு வரும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும் சிங்கப்பூர் மக்கள் பீதியுடன் தான் இருக்கிறார்கள்.

சீனாவில் உருவாகி , சிங்கப்பூர் வழியாக புது கொரொனா வைரஸ் ,உலகமெங்கும் பரவி வருகிறது.

ABC செய்தி நிறுவனத்தின் தகவல் படி, KP.2 கொரொனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் 28 சதவீதம் பரவி உள்ளது எனத் தெரியவந்துளளது.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த புதுவகை கொரொனா வைரஸ் 91 பேரைப் பாதித்துள்ள நிலையில் இந்திய மக்களும் கவனமாக இருக்கவேண்டும் என்பது அவசியமாகிறது. எனினும், இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரொனா, முதல் அலையின் பாதிப்புகளில் இருந்தே இன்னுமும் உலகம் மீண்டு வரவில்லை. அதற்குள் அடுத்தடுத்து கொரொனா வகைகள் உருவாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author