சிலியில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு!

Estimated read time 0 min read

சிலி நாட்டில் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின. இதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.

தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் வினாடெல்மார் மலைப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மற்ற இடங்களுக்கும் மளமளவென பரவியது.

அப்பகுதியில் இருந்த வீடுகளுக்கும் காட்டுத்தீ பரவியது. வனப்பகுதியின் சுற்றி உள்ள பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும், கட்டுக்கடங்காத காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

இந்த காட்டுத்தீயால் சுமார் 20 ஆயிரம் ஹெக்டர் அளவிலான வனப்பகுதி எரிந்து நாசமாகியது. அரிய வகை தாவரங்களும், ஏராளமான வன விலங்குகளும் தீயில் எரிந்தன. அப்பகுதியில் மேலும், தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 122 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். நூற்றுக்கணக்கானோர் காணவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பலர் தீ காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள வீடுகளில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author