பிணைக் கைதிகளை மீட்க புதிய பேச்சுவார்த்தையா? இஸ்ரேல் பிரதமர் விளக்கம்!

Estimated read time 1 min read

காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணைக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகள் கத்தார் மத்தியஸ்தத்தில் நடந்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுக் கொலை செய்தனர்.

அதோடு, சுற்றுலா வந்த வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்த நிலையில், 3,500 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியது. அன்று தொடங்கிய தாக்குதல் இன்று வரை நிற்கவே இல்லை. முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்திவரும் தாக்குதலில், காஸா நகரமே உருக்குலைந்து கிடக்கிறது. ஹமாஸ் தலைமையகம் உட்பட பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமாகி விட்டன.

இதனிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக, கத்தார் நாட்டு உதவியுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையில் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் 7 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. எனினும், இதன் பிறகு இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில், 2-வது கட்டமாக பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடர்பாக கத்தார், எகிப்பது நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா மீண்டும் முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதை இஸ்ரேல் பிரதமரும் உறுதி செய்திருக்கிறார்.

இஸ்ரேலில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மொசாட் தலைவர் டேவிட் பர்னியா மற்றும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி ஆகியோர் ஐரோப்பாவில் சந்தித்துக் கொண்டது குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இக்கேள்வியை நெதன்யாகு புறக்கணித்தாலும், “எங்களுக்கு கத்தார் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அதைப் பற்றி சரியான நேரத்தில் நீங்கள் கேட்பீர்கள் என்று நினைக்கிறேன். இருப்பினும் பிணைக் கைதிகளை முழுவதுமாக மீட்க முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், பேச்சுவார்த்தைகள் தொடர்பான கூடுதல் தகவல்களை வழங்க நெதன்யாகு மறுத்து விட்டார். எனினும், இஸ்ரேலைச் சேர்ந்த 3 பிணைக் கைதிகளை தவறுதலாக சுட்டுக் கொன்றது தொடர்பாக, அந்நாட்டில் வெடித்த போராட்டத்தின் எதிர்விளைவாக இஸ்ரேல் இம்முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும், மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நெதன்யாகு, “நாங்கள் எங்கள் இருப்புக்கான ஒரு போரில் இருக்கிறோம். சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தாங்க முடியாத பொருட்செலவுகளை தாண்டி, வீழ்ந்த இந்நாட்டின் மகன்கள் மற்றும் மகள்களுக்காக வெற்றி வரை போரை தொடர வேண்டும்” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author