அயோத்தி கோவில் உருவான வரலாறு!

Estimated read time 1 min read

அயோத்தி இராமஜென்ம பூமி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஸ்ரீராமர் கோவில் கட்டுமானப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, தற்போது 1,800 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீராமர் கோவில் மிகவும் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. எனினும், இக்கோவில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது.

அதேசமயம், இந்தக் கோவில் உருவாவதற்கு எத்தனை ஆண்டுகளாக போராட்டம் நடந்தது தெரியுமா? எத்தனை போராட்டங்கள் நடந்தது தெரியுமா? எத்தனை லட்சம் பேர் உயிர்த் தியாகம் செய்தார்கள் தெரியுமா? இதைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்…

சுமார் 492 ஆண்டுகளுக்கும் மேலான பக்தி, போராட்டம், தியாகம் ஆகியவைதான் இந்த அயோத்தி ஸ்ரீராமர் கோவிலின் மிக நீண்ட கதை. அயோத்தியில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த ஸ்ரீராமர் கோவில், கடந்த 1528-ம் ஆண்டு மொகலாய மன்னன் பாபரால் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது. இதுதான் பின்னாளில் பாபர் மசூதி என்று அழைக்கப்பட்டது.

இதையடுத்து, அயோத்தி கோவிலை மீட்பதற்கான போராட்டங்கள் தொடங்கின. 76 போராட்டங்கள் நடந்தும், உயிர்ப் பலிதான் மிஞ்சியதே தவிர கோவிலை மீட்க முடியவில்லை. இக்கோவில் மீட்புப் போராட்டத்தின்போது, மொகலாய மன்னர்களில் கொடுங்கோலுக்கும், வாளுக்கும் மட்டும் 3.5 லட்சம் இந்துக்கள் தங்களது இன்னுயிரை நீத்திருக்கிறார்கள்.

இதன் பிறகு, 1855-ம் ஆண்டு முதல் இராமர் கோவிலை மீட்பதற்கான சட்டப் போராட்டம் தொடங்கியது. இந்த சூழலில், 1949-ம் ஆண்டு சர்ச்சைக்குரிய கட்டடத்துக்குள் ஸ்ரீராமர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தீவிரமடைந்தது. இது சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது.

இதையடுத்து, 1980-களின் பிற்பகுதியில் அயோத்தி கோவில் மீட்புப் போராட்டம் வேகம் பெற்றது. 1980-களின் பிற்பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முயற்சிகளாலும், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் இராம ரத யாத்திரையாலும் போராட்டம் உச்சக்கட்ட வேகத்தை அடைந்தது.

பின்னர், 1989-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதியன்று, பீகாரைச் சேர்ந்த காமேஷ்வர் சௌபால், சர்ச்சைக்குரிய இடத்தில் அயோத்தி இராமர் கோவில் கட்டுவதற்கான தொடக்கக் கல்லை வைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க அடிக்கல் நாட்டு விழாவில் முக்கியப் பங்காற்றினார்.

இந்த சூழலில், இராமர் கோவில் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த அலகாபாத் உயர் நீதிமன்றம், 2003-ம் ஆண்டு மசூதியின் அடித்தளத்தை ஆய்வு செய்வதற்காக தரையில் ஊடுருவும் ரேடார் (ஜி.பி.ஆர்.) ஆய்வுக்கு உத்தரவிட்டது.

இந்த மேம்பட்ட ஆய்வுதான், பாபர் மசூதிக்கு அடியில் இந்துக் கோவில் கட்டுமான அமைப்பு இருப்பதை வெளிப்படுத்தியது. இந்த கண்டுபிடிப்புகளை சரிபார்க்க, உயர் நீதிமன்றம் இந்திய தொல்லியல் துறை (ASI) மூலம் அகழ்வாராய்ச்சியை நடத்த ஒரு குழுவை நியமித்தது.

இந்த ASI-ன் அறிக்கையில், சர்ச்சைக்குரிய இடத்தின் அடியில் வட இந்திய பாணியிலான கோவிலின் எச்சங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியது. இது சட்ட வழக்கில் ஒரு முக்கியமான தொல்பொருள் பரிமாணத்தைச் சேர்த்தது.

இதன் பிறகு, செப்டம்பர் 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ பெஞ்ச், அயோத்தி நிலம் தொடர்பான நீண்டகால சர்ச்சையைத் தீக்கும் வகையில், ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பில், இராமர் கோவிலை இடித்ததை ஒப்புக்கொண்டது.

அதேசமயம், பகவான் ராம்லல்லா விரஜ்மான், நிர்மோஹி அகாரா மற்றும் உத்தரப் பிரதேச சன்னி மத்திய வஃப் வாரியம் ஆகியோருக்கு இடையே சர்ச்சைக்குரிய நிலத்தை 3 பாகங்களாக பிரிக்க உத்தரவிட்டனர்.

ஆனால், இத்தீர்ப்பு 3 தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே, இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுமார் 10 ஆண்டுகாலம் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இதனிடையே, இவ்வழக்கில் மத்தியஸ்தம் செய்வதற்காக, 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு மற்றும் வாழும் கலை நிறுவனர் ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி ஆகியோர் அடங்கிய சமரசக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

ஆனால், மத்தியஸ்தம் பலனளிக்காது என்பது ஜூலை மாதத்திற்குள் தெளிவானது. இதையடுத்து, அயோத்தி வழக்கில் 2019 ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றம் தினசரி விசாரணையைத் தொடங்கியது. தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மேல்முறையீட்டு மனுக்களை உன்னிப்பாக ஆய்வு செய்தது.

40 நாட்கள் 170 மணி நேரம் நீடித்த வாதங்கள் அக்டோபர் 16-ம் தேதி முடிவடைந்தது. பின்னர், 2019 நவம்பர் 9-ம் தேதி இவ்ழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஸ்ரீராமரின் முறையான சொத்தாக 1993-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உறுதி செய்தது.

இவ்வழக்கில் பங்களித்த பல சட்ட வல்லுநர்களில், தந்தை மற்றும் மகனான ஹரி சங்கர் ஜெயின் மற்றும் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோரின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு அளப்பரியது. இருவரும் இந்து, ஜைன மற்றும் பௌத்த புனிதத் தலங்கள் தொடர்பான சட்டப் போராட்டங்களிலும் தங்களது குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி கோவிலின் கட்டுமானத்தை மேற்பார்வையிட, ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ அறக்கட்டளையை உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, 2020 ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற்ற பூமிபூஜையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர்.மோகன் பகவத் போன்ற முக்கியஸ்தர்கள் அடிக்கல் நாட்டினர்.

இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த விழாவில் நாட்டின் புனித நதிகள் மற்றும் புனித தலங்களில் இருந்து புனித நீர் மற்றும் மண் அர்ப்பணிக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author