ஆம்பல்கள்.

Estimated read time 1 min read

Web team

526164.jpg

அகம் மலர்ந்த ஆம்பல்கள் !
நூல் ஆசிரியர் : மதுரா வேள்பாரி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

.

வெளியீடு :
தமிழ்ப் பதிப்பகம், 13, முத்து இருளாயி இல்லம்,
திருவள்ளுவர் நகர் 4ஆவது தெரு, பழங்காநத்தம், மதுரை-625 003. பக்கம் : 176, விலை : ரூ. 80.

******

நூல் ஆசிரியர் கவிஞர் வேள்பாரி, மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கில் கவிப்பாடிப் பரிசுகள் பெற்றவர். சிங்கப்பூர் சென்று மதுரையின் கவிக்கொடியை நாட்டி வருபவர்.

‘அகம் மலர்ந்த ஆம்பல்கள்’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. பாராட்டுக்கள். பல்வேறு தலைப்புகளில் கவிதை வடித்துள்ளார். போட்டிகளில் பரிசுபெற்ற கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி. வீரபாண்டியத் தென்னவன் அணிந்துரை வழங்கி உள்ளார். பலரும் வழங்கி உள்ளனர். அணிந்துரை, வாழ்த்துரை, என்னுரை என்று 36 பக்கங்கள் உள்ளன. அணிந்துரை கொஞ்சம் அதிகம் தான். அடுத்தப் பதிப்பில் அணிந்துரையைச் சுருக்கி வெளியிடுங்கள்.

உயிர் தந்த அன்னைக்கும் உ(ய)ணர்வு தந்த அன்னைத் தமிழுக்கும் நூலை காணிக்கையாக்கி இருப்பது சிறப்பு.

முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது. பிறப்பு என்ற தலைப்பில் தொடங்கி உள்ளார்.

பிறப்பு !

இருப்புக்கும் சிறப்புக்கும் / திறக்கப்பட்ட முதல் கதவு
இல்லற வினாவின் / விடை தெரியாத விடை
பூமிப்பந்தை உதைக்க வந்த மனித சக்தி!
மந்தையாகப் பிறந்தாலும் / விந்தையாகவும் சில
மனிதநேயப் பிறப்புகள்!

மந்தையாகப் பிறந்தாலும் சில மனிதர்களே விந்தையாக மாறி வெற்றிகள் பெற்று சாதனை புரிகின்றனர். சக மனிதனை நேசிக்கின்றனர். மனிதநேய அறத்துடன் வாழ்கின்றனர்.

சிங்கை!

சிங்கை என்பது போதி மரம்

சிருங்காரம் நிறைந்திட்ட சீர் நகரம்
உழைப்பால் உயர்ந்த அலைநகரம்

உயர்வுக்குஏற்ற தலைநகரம்
பல இன மொழி மக்கள் நிறைந்த நகரம்

பாட்டாளி மக்கள்

உறைநகரம் !

பிறந்தது தமிழகம் என்றாலும் தொழில் நிமித்தமாகப் புகுந்திட்ட சிங்காரச் சிங்கப்பூர் பற்றி வடித்த கவிதை நன்று.

மாவீரர் நாள் !

அகிம்சை கண்ட / அண்ணலின் வழி நின்று
உண்ணாமல் விரதமிருந்து / உயிர் நீத்த உத்தமனாம்
திலீபனின் நினைவாக / ஏற்றி வைத்த தீபமிது
கொழுந்து விட்ட சுடரதுவும் / குளிரவில்லை இன்று வரை !

தமிழ் இன உணர்வுடன் ஈழத்தமிழர்களின் உள்ளக் குமுறலையும் கவிதைகளில் நன்கு பதிவு செய்துள்ளார். பாராட்டுக்கள்.

கோழிக்குஞ்சு!

தாய்க்கோழி இறகுகளின் தகதகக்கும் வெப்பத்தில்
போய் ஒளிந்து மூடிக் கொண்டு போர்வையென அணிந்தாயே!
உடற்சூட்டை உள்ளிறக்கி உனக்காக தனை உருக்கி
இடர்பட்டக் கதையெல்லாம் இதுவென்று அறிவாயா!

கோழிக்குஞ்சைக் குறியீடாகக் கொண்டு படிக்கும் வாசகர்களின் தாயின் அருமை, பெருமை, தியாகம் உணர்த்தியது சிறப்பு.

என்னுயிர்க் காதலி!

என்னுயிர்க் காதலி / ஈடு இணையற்ற / இயற்கை எழிலை
இவள் பூப்பெய்து / பூமி சூடிய பூங்குழலி
சங்க இலக்கியங்களும் / இவளது அங்க / இலக்கியங்களைப்
பாடும் / ஐம்பெரும் காப்பியங்களும் / ஆபரணங்களும்.

காதலைப் பாடாத கவிஞர் இல்லை. காதலைப் பாடாத கவிஞன் கவிஞனே இல்லை. நூல் ஆசிரியர் கவிஞர் வேள்பாரியும் காதல் பாடி உள்ளார். ஊறுகாய் போல சிறிதளவு பாடியது சிறப்பு.

அக(த்)தி!

உள்ளத்தில் நெருப்பைக் கடந்து / இல்லத்தில் உடைமை
களை இழந்து / எல்லைகள் எதுவென்ற ஏக்கத்தில்
தொல்லைகள் தொடர்ந்திடும் இவர்களுக்கு
உலகே நீ வைத்த பெயர் அகதி!

புலம் பெயர்ந்தவர்களின் இன்னலை மன உணர்வை வெளிப்படுத்தும் விதமாக வடித்திட்ட கவிதை நன்று.

உடன்பிறப்புகளே!

இனப்பெருக்கம் செய்ய வந்த / இந்தியப் பறவைகள் அல்ல
நாங்கள் / இல்லங்கள் செழிப்பதற்காக இந்து வந்த நாங்கள்
ஆசைக் கனவுகள் ஆயிரம் சுமந்து / ஆறாயிரம் வெள்ளியை
முகவரிடம் ஈந்து / அன்னை தந்த அன்புமார் பிரிந்து
சுற்றமும் நட்பும் கண்ணீர் சொரிந்து /
உறவுச் சிலுவைகளை உள்ளத்தில் சுமந்து / உழைக்க வந்த
உடன்பிறப்புக்களே!
ஒருவகையில் பார்த்தால் / நீங்கள் கூட இயேசுநாதர்களே!

குடும்ப நலனுக்காக, மேன்மைக்காக, குடும்ப உறவுகளைப் பிரிந்து புலம் பெயர்ந்து உழைத்துப் பணம் ஈட்டிடும் உயர்ந்த உள்ளங்களை இயேசு எனக் குறிப்பிட்டதும் உண்மை தான். நன்று, பாராட்டுக்கள்.

பள்ளிக்கூடம்! இளமைப் பட்டாம் பூச்சிகள்
சிறகுகள் விரிக்கும் / வ(எ)ண்ணமிகு தோட்டம்
அறிவை விருத்தி / செய்யும் ஆற்றல்மிகு / அனுபவச் சுவை
ஒழுக்கம் உயர்வைப் / போதிக்கும் உன்னதக் / கலைக்கூடம்
நாளைய தலைமுறைகளை / நடவு செய்யும் / நம்பிக்கை வயல்கள்
வியாபாரச் சந்தையாகவும் / மாறி விட்ட வந்தமிடு விற்பனை!

பள்ளியின் மேன்மையை கல்வியின் பயனை சிறப்பாக வடித்து விட்டு உயர்ந்த கல்வி இன்று வியாபாரச் சந்தையாக மாறிவிட்ட அவலத்திற்குக் கண்டனம் செய்து முடித்த முடிப்பு மிக நன்று.

தேர்தல் !

குடவோலை முறையிலே வாக்கெடுப்பு அன்று
குடலுருவி நடந்திடும் வகுந்தெடுப்பு இன்று
ஊர் கூடி ஒன்றிணைந்து நடத்திடுவார் தேர்தல்!
ஊர் கேடி இன்றிணைந்து நடப்பதுவா தேர்தல்?

தேர்ந்தெடுக்கத் தள்ளுகிறார்கள், வீடுதோறும் பணத்தை
துர்ந்தெடுக்க வேண்டுமுங்கள் தூய்மை கெட்ட மனத்தை!

உலகமே பாராட்டிய மக்களாட்சி தேர்தல் இன்று உலகமெ சிரிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து போன அவலத்தை சுட்டிய விதம் நன்று.

தாஜ்மகால் !

வெள்ளைப் பட்டுடுத்தி / வேய்ந்து வைத்த
கூரையென / கொள்ளை அழகெல்லாம் / கொட்டி
வைத்த பெட்டகமாய்!

உலக அதிசயமாக இருந்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்து வரும் தாஜ்மகால் பற்றிய கவிதை நன்று.

நூலின் தலைப்பிலான கவிதை நன்று.

அகம் மலர்ந்த ஆம்பல்கள்!

அன்னையவள் ஈன்றெடுத்து / அகமகிழ்ந்த காலம் முதல்
கண்ணாகப் போற்றியவள் / கனிவோடு காத்து வந்தாள்
எண்ணமெனும் தடாகத்தில் / எத்தனையோ ஆம்பல்கள்
வண்ணமாகப் பூத்து வரும் / வாழும் வரை நினைவலைகள்!

பல்வேறு தியாகங்கள் செய்து, பெற்று, வளர்த்து உருவாக்கிய அன்னையைப் பற்றி நினைவுகள் அனைவருக்கும் உயிருள்ளவரை இருக்கும் என்பது உண்மை.

கூ(வீ)டு!

வாஸ்து பார்க்கவில்லை / வங்கிக் கடனில்லை
பத்திரிகை அடிக்கவில்லை / பாலும் காய்ச்சவில்லை
அழகாலே கட்டினாலே / அளவான சிறு கூடு / ஆகா இதுவல்லவோ
அழகான வீடு!

அகம் மலர்ந்த ஆம்பல்கள் படித்து முடித்ததும்
நமது முகமும் அகமும் மலர்ந்து விடுகின்றன
கவிதை வரிகள் பற்றிய நினைவுகள் ஆம்பலாக மலர்கின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author