இதயம் ஒரு கோயில்.

Estimated read time 1 min read

Web team

IMG-20240611-WA0029.jpg

இதயம் ஒரு கோயில் !

நூல் ஆசிரியர் : மருத்துவர் G. பக்தவத்சலம் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

கே.ஜி. மருத்துவமனை, கோவை –
0422-2212121, drgb@kggroup.com
பக்கம் : 103, விலை : ரூ. 100

*****
மதுரையில் தட்சிணா அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்விற்கு சென்று இருந்தேன். அந்த விழாவில் மிகவும் நகைச்சுவையாகப் பேசி மகிழ்வித்தவர் இந்நூல் ஆசிரியர் மருத்துவர் G. பக்தவத்சலம். புன்னகையை எப்போதும் முகத்தில் அணிந்தே இருக்கிறார். விழாவிற்கு வந்த அனைவருக்கும் இந்நூல் அன்பளிப்பாக வழங்கினார். இந்த முதல் பதிப்பு ஜுன் 2009ல் 1.2 இலட்சம் பிரதிகள் அய்ந்தாம் பதிப்பு மார்ச் 2015 வந்துள்ளது.

‘இதயம் ஒரு கோயில்’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. தலைப்பைப் படித்ததும் இசைஞானி இளையராஜாவின் பாடலும் நினைவிற்கு வந்து போகின்றது. இந்த நூலினை மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலையும் அவரே வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.

இதயம் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் சிறந்த நூல். நூல் ஆசிரியர் கோவையில் புகழ்பெற்ற இதய மருத்துவர் என்பதால் பல அறுவைச் சிகிச்சைகள் செய்தவர் என்பதால் கண்ட, உணர்ந்த அனுபவத்தை இதயம் பற்றிய விளக்கத்தை நூல் முழுவதும் விதைத்து உள்ளார். ஒரு மருத்துவர், அழகு தமிழில் எல்லோருக்கும் புரியும்படி நூல் எழுதியதற்கே முதல் பாராட்டு.

இதயம் பற்றி பல கருத்துக்கள் நூலில் உள்ளன. அவற்றிலிருந்து பதச் சோறாக சில துளிகள் உங்கள் பார்வைக்கு :
“நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் முறை துடிக்கிறது நமது இருதயம். சராசரியாக 70 ஆண்டுகள் உயிர்வாழும் ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட 250 கோடி முறை இருதயம் துடிக்கிறது. 24 மணி நேரத்தில் 20 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை இருதயம் ‘பம்ப்’ செய்கிறது. இருதயம் ஒருமுறை பம்ப் செய்யும் போது, 500 மிலி. ரத்தம் உடலின் பாகங்களில் பாய்ச்சப்படுகிறது. நமது உடலில் இருக்கும் ரத்த நாளங்களை நீட்டினால் பத்து லட்சம் கி.மீ. தூரம் போகும். அத்தனை தூரத்துக்கும் ரத்தத்தைப் பாய்ச்ச வேண்டிய வேலையை இருதயம் தான் செய்கிறது”.

கைஅளவு உள்ள இதயம் எவ்வளவு பெரிய வேலைகளை, எவ்வளவு இயல்பாக செய்து வருகின்றதுஎன்பதை படித்த போது
வியந்து போனேன். ‘இதயம் ஒரு கோயில்’ சரியான தலைப்பு தான். பயிர் வளர் நீர்பாய்ச்சல் எவ்வளவு அவசியமோ, அது போல மனித
உயிர் வளர ; அல்ல நீடிக்க… இதயத்தின் ரத்தம் பாய்ச்சல்அவசியம்
என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் நூல் ஆசிரியர் மருத்துவர் G. பக்தவத்சலம் அவர்கள்.

நலமான வாழ்விற்கு வழிகள் எழுதி உள்ளார். நமது வயிறு குப்பைத்தொட்டி அல்ல, கண்டதையும் கொட்டுவதற்கு, எனவே நல்லவைகளை மட்டும் உண்ணுங்கள், கெட்டவைகளை உண்ணாதீர்கள் என்று அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக அசைவம் அதிகம் உண்பது உடல் நலத்திற்கு கேடு என்பதை அறிவுறுத்தி உள்ளார்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
(புலால் மறுத்தல், குறள் 260)

உலகப்பொதுமறை படித்த திருவள்ளுவரின் திருக்குறளை நினைவூட்டி உள்ளார்.விலங்கு, பறவைகளைக் கொல்லாமல் சைவம் உண்டு வாழ்ந்தால் கை கூப்பி எல்லா உயிரும் வணங்கும் என்கிறார் .மிக நுட்பமாக சொல்லைப் பயன்படுத்துவதில் வல்லவர் திருவள்ளுவர் .கை கூப்பி மனிதர்கள் வணங்குவார்கள் என்று சொல்லாமல், எல்லா உயிரும் வணங்கும் என்கிறார் .உண்மைதான் ஆட்டை கொல்லாமல் விட்டால் ஆடு வணங்கும் ,கோழியைக் கொல்லாமல் விட்டால் கோழி வணங்கும். அவை வாங்குவதை வுடன் நாம் நலமாக வாழ் சைவ உணவே சிறந்தது .அக்கருத் தை நூல் ஆசிரியர் : மருத்துவர் G. பக்தவத்சலம் அவர்கள் நன்கு நூலில் வலியுறுத்தி உள்ளார் .

“நூறு வயது வாழ் ஆசைப்படுபவர்களுக்கு, ரத்த அழுத்தம், கொழுப்பு உட்பட வாழ்க்கையில் பல விசயங்கள் 100க்குள் இருக்க வேண்டும். மாதத்துக்கு 100 கி.மீ. நடக்க வேண்டும், எடை மட்டும் 100ஐ எட்டவே கூடாது”.

இந்த நூலில் 56 சிறிய கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அக்கட்டுரையின் முக்கிய சாரத்தை தனிஎழுத்தில் பெட்டியில் அடையாளப்படுத்தி இருப்பது சிறப்பு. வாசித்ததை திரும்பவும் அசைபோட உதவுகின்றன.

இன்றைய நவீன உலகில் இளையோர் அனைவரும் துரித உணவு அடிமைகளாகி வருகின்றனர். துரித உணவு என்பது உடல் நலத்திற்கு கேடு என்பதை பல்வேறு ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் பார்த்து, படித்து வருகிறோம். “வாழ்க்கை”யை பாஸ்ட் ஆக முடித்து விடும் உணவு தான் ‘பாஸ்ட் ஃபுட்’. வாரத்துக்கு ஒரு நாள் அசைவம் சாப்பிடலாம், தப்பில்லை. வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் சைவம் சாப்பிட்டால் தான் தவறு.

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஹைக்கூ என் நினைவிற்கு வந்தது.

நலக் கேடு
துரித உணவு
துரித சாவு !

பல பயனுள்ள தகவல்கள் நூலில் உள்ளன. இந்த நூல் படித்தால் படிக்கும் வாசகர்கள் மனதில் மனமாற்றம் நிகழும் என்று உறுதி கூறலாம். நம் உடலின் மீது, நலத்தின் மீது, இதயத்தின் மீது பற்று வரும் விதமாக நூலை எழுதி உள்ளார்கள், பாராட்டுகள். இதயம் எப்படி இயங்குகுறது என்பதை சராசரி மனிதர்களுக்கும் புரியும் வண்ணம் மிக எளிமையாக விளக்கி உள்ளார்.

ஹார்ட் அட்டாக் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். படுத்தவர் எழுந்திருக்கவில்லை, தூக்கத்திலேயே இறந்து விட்டார் என்பார்கள். “ஹார்ட் அட்டாக்” என்பது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது. இருதய தசைகளின் செயல்பாடு குறைவதால், இருதயத்திலிருந்து வெளியேரும் ரத்தத்தின் அளவு குறைந்து, சரியாக ரத்தம் வெளியேறாத நிலையில் ஏற்படும் பாதிப்பே ஹார்ட் ஃபெயிலியர். சமதளத்தில் நடக்கும் போதும் மூச்சு வாங்கினால், ஹார்ட் ஃபெயிலியர் உள்ளது என்பதை அறியலாம்”.

அதிக கோபம் என்பது இதயத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என்பதை எழுதி உள்ளார். சினம் காக்க வலியுறுத்தி உள்ளார். கோபத்தை கடவுளிடம் காணிக்கையாக கொடுத்து விடுங்கள். கடவுளிடம் கொடுத்ததை நீங்கள் நிச்சயம் திருப்பி வாங்க மாட்டீர்கள் என்று எழுதி உள்ளார்.

நெஞ்சுவலி வந்தால் என்ன செய்ய வேண்டும். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து கொள்வது நல்லது. இந்த நூல் மிகவும் பயனுள்ள நூல். நெஞ்சுவலி வராதிருக்க என்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், கோபம் தவிர்க்க வேண்டும், நெஞ்சுவலியின் அறிகுறி என்ன? வந்தால் என்ன செய்ய வேண்டும், பதட்டப்படாமல் வாழ வேண்டும், எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் மனநிலை பெற வேண்டும்.

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் அதன் காரணமாகவும் இதய பாதிப்பு வரலாம். சிகரெட், மது இரண்டும் இதயத்திற்கு கேடு தருபவை என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார். மதிய உணவிற்கு பின் சிறிய தூக்கம் நல்லது என்கிறார். நின்ற இதயத்தை திரும்ப இயங்க வைக்கும் முதலுதவி பற்றி, இப்படி பல பயனுள்ள தகவல்கள் நூலில் உள்ளன. வாங்கிப் படித்துப் பாருங்கள், நூறாண்டு வாழலாம்.
.
குறிப்பு .இந்நூல தொடர்ந்து பல பதிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றது .உ .பி . முதலவர் மாயாவதி என்று உள்ளது .தற்போது அகிலேஷ் யாதவ் உள்ளார் .அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடலாம் .

Please follow and like us:

You May Also Like

More From Author