உரைவேந்தர் ஔவை துரைசாமி

Estimated read time 1 min read

Web team

IMG-20240523-WA0003.jpg

உரைவேந்தர் ஔவை துரைசாமி!

நூல் ஆசிரியர் : பேராசிரியர்

தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி,
சென்னை-600 113.
பக்கம் : 145, விலை : ரூ. 100.

******

நூலாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள், தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களைக் காதலித்துக் கரம் பிடித்து, காதல் திருமண வெற்றிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர். மணிவிழா கண்டவர். இலக்கிய இணையர். இருவருக்கும் நூல் எழுதுவதில் போட்டி. ஆரோக்கியமான போட்டி தான். தமிழ் கூறும் நல்உலகிற்கு நல்ல நூல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

வரலாற்று சிறப்பு மிக்க மதுரையின் பெருமைகளில் ஒன்றான செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். பலருக்கு நெறியாளராக இருந்து முனைவர் பட்டம் பெற்றிட உதவியவர். தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினை பெற்ற முதல் பெண்மணி. மகாகவி பாரதியாரிடம் நிவேதிதா அவர்கள் குறிப்பிட்டது போல தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களுடனேயே உடன் செல்லும் பெருமைக்கு உரியவர். இன்றைய இளைய சமுதாயம் அறிந்திராத உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களின் ஆளுமையை ஆராய்ந்து அற்புத நூல் வடித்துள்ளார், பாராட்டுக்கள்.

தமிழன்னைக்கு மகுடம் சூட்டும் விதமாக இந்நூலை பதிப்பித்து வெளியிட்டு உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களுக்கும் பெருமை சேர்த்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு பாராட்டுக்கள். மருத்துவர் ஔவை மெய்கண்டான் அவர்களின் அணிந்துரை சிறப்பு.

ஔவை துரைசாமி, ஔவை நடராசன், மருத்துவர் ஔவை மெய்கண்டான் இவர்கள் பெயரைப் படிக்கும் போதெல்லாம் ‘ஔவை’ என்ற பெயர் எப்படி வந்திருக்கும் என்ற கேள்வி எனக்குள்ளே நெடுநாளாக உண்டு. அதற்கான விடை இந்த நூலில் உள்ளது.

“அவ்வையார் குப்பத்திலிருந்து படிக்கச் சென்ற சில மாணவர்களில் இன்னொருவருக்கும் துரைசாமி என்று பெயர். ஆகவே அந்தக்கால வழக்கப்படி பள்ளி ஆசிரியர் அப்போதைக்கு ஊர்ப்பெயரை இணைத்து ‘அவ்வை துரைசாமி’ என்று அழைத்திருக்கிறார். அன்று முதல் அவ்வை துரைசாமி என்பதை நிலைத்து விட்டது”.

‘அவ்வை’ என்பது ஊர்ப்பெயருக்காக இணைக்கப்பட்டது. ஆனால் அவரோ அவ்வையைப் போலவே தமிழுக்கு பல கொடைகளை இலக்கியத்தை வழங்கி காரணப்பெயராக்கி விட்டார்.

8 தலைப்புகளில் கட்டுரைகளாக வடித்து நூலாகத் தொகுத்துள்ளார். அவ்வை துரைசாமி அவர்களின் வரலாறு தொடங்கி அவரது ஆக்கங்கள் விளக்கங்கள் யாவும் நூலில் உள்ளன.

“பிறப்பும் கல்வியும் பணியும்”.

ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் தென்னார்க்காடு மாவட்டத்தில், திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஔவையார்குப்பம் என்னும் ஊரில் பிறந்தவர். அவ்வூரில் கருணீகர் (ஊர்க்கணக்கர்) மரபில் தோன்றிய சுந்தரம்பிள்ளைக்கும், சந்திரமதி அம்மையாருக்கும் 05.09.1902ஆம் ஆண்டு தோன்றிய ஐந்தாம் குழந்தையே நம் உரைவேந்தர் அவருக்கு 11 குழந்தைகள் பிறந்தன என்ற தகவல் மட்டுமல்ல, அவர்கள் மணமுடித்த இணையின் பெயர்களும் உள்ளன. மிகப்பெரிய ஆளுமையான அவ்வை துரைசாமி அவர்களுக்கு வழங்கி உள்ள மிகப்பெரிய பெருமையே இந்நூல்.

உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் உரை கூறும் முறையை நூலில் விளக்கி உள்ளார். உரை மட்டும் எழுதாமல் பாடலாசிரியரும், பாடல் அமைந்த சூழலும், பாடல், உரை, விளக்கம் இப்படி நான்கு பகுதிகளாகப் பிரித்து உரை எழுதி பாமரர்களுக்கும் பாடல் புரியும் வண்ணம் எளிமையாக உரை எழுதிய காரணத்தால் தான் அவருக்கு ‘உரைவேந்தர்’ என்ற பட்டம் கிடைத்துள்ளது என்பதை உணர்த்தும் விதமாக நூல் உள்ளது.

ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் அறிஞர்களின் மேற்கோளும் தொடங்கி இருப்பது நல்ல யுத்தி.

“வாழும் தமிழுக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றித் தமிழ் நெஞ்சங்களில் எல்லாம் நிலையாக வாழ்ந்து கொண்டிருப்பவர் உரைவேந்தர் பேராசிரியர் ஔவை துரைசாமி அவர்கள் ஆவார்”

பி.வி. கிரி.

.

இப்படி பல அறிஞர்களும் பாராட்டும் இலக்கியப் புலியாகவே வாழ்ந்துள்ளார். உரைவேந்தர் அவ்வை துரைசாமி அவர்கள் புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பொன்மொழிக்கு ஏற்ப அவரது புதல்வர் ஔவை நடராசன் அவர்களும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து தமிழ்ப்பணி செய்தவர், செய்து வருபவர்.

மற்றொரு மகனான அணிந்துரை வழங்கி உள்ள ஔவை மெய்கண்டான் அவர்கள் மதுரையில் மருத்துவராக இருந்து கொண்டு நல்ல பல கவிதைகளும் எழுதி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கவிதை தொகுப்பு நூலில் அவரது கவிதையும் என் கவிதையும் இடம்பெற்றது. அன்று முதல் அவருடன் அறிமுகமாகி நட்பு உண்டு. இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு ஆய்வுரை தந்து மகிழ்ந்தார்.

அம்பல், அலர் – வேறுபாடு சுட்டுதல்

உரைவேந்தர், தொல்காப்பியம் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், தேவாரப்பாடல்கள், தொல்காப்பிய உரைகள் எனப் பலப்பல நூல்களிலிருந்து சான்றுகள் காட்டித் தம் கருத்தை நிறுவுவதை உரை மரபாகக் கொண்டுள்ளார்”.

உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் தமிழ் இலக்கியம் எனும் பலாப்பழத்தை பக்குவமாக உரித்து பலாச்சுளையாக பக்குவமாக வழங்கிய பாங்கு பற்றி நூலில் விரிவாக உள்ளார்கள். பாராட்டுக்கள்.

உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் அன்று செய்திட்ட தமிழ்ப்பணியை ஆய்வு செய்து பல்வேறு நூல்கள் படித்து தமிழுக்காக வாழ்நாளை அர்ப்பணித்து தமிழறிஞருக்கு இந்த நூலின் மூலம் மணிமகுடம் சூட்டி உள்ள பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் குறிப்பிடுவது போல தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். இலக்கிய இணையருக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author