உழைப்பின் நிறம் கருப்பு.

Estimated read time 1 min read

Web team

IMG-20240524-WA0016.jpg

உழைப்பின் நிறம் கருப்பு !

( ஹைக்கூ கவிதைகள் )

நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! aarison.2008@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தளிர் பதிப்பகம் 2/2 தீபம் வளாகம் ,முதன்மைச் சாலை ,சாத்தூர் 626203.விலை ரூபாய் 100.

உழைப்பின் நிறம் கருப்பு ! நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது.நூலின் அட்டைப்படத்தில் கருப்பு நிற உழைப்பாளியின் புகைப்படம் மிக நன்று .தமிழ்த் தேனீ முனைவர் இரா மோகன் அவர்களின் அணிந்துரை , வாழ்த்துரை நூலிற்கு அணிவித்த மகுடமாக உள்ளன. த .மு .எ .க .ச .திரு எஸ் .கருணா ,இயக்குநர் தமிழ் இயலன் ,முனைவர் பு .ரா. திலகவதி , ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் இனிய நண்பர் பொன்குமார் ஆகியோரின் அணிந்துரை, வாழ்த்துரை மிக நன்று .இந்த ஹைக்கூ கவிதை நூலை ஹைக்கூ கவிஞர்களின் முன்னோடி கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது மிகச் சிறப்பு .

நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் அவர்கள் சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் கலந்து கொண்டார் .சந்தித்து உரையாடினேன். பல்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து ஹைக்கூ படைத்து வரும் படைப்பாளி .ஹைக்கூ எழுதும் நுட்பம் உணர்ந்த காரணத்தால் தொடர்ந்து ஹைக்கூ நூல்கள் எழுதி வருகிறார். அலைபேசி வழி தினந்தோறும் ஹைக்கூ அனுப்பியவர் .

முயன்றால் வெற்றி பெறலாம் .வானம் வசப்படும் என்பதை உனர்த்தும் விதமான நூலின் முதல் ஹைக்கூ இது . மிக நன்று .

இறக்கைகளை அசைக்க அசைக்க
அருகில் வருகிறது
வானம் !

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் சிலைகளின் அழகில் உள்ளம் மயங்குவது உண்டு .சிற்பியின் திறமை அறிந்து வியப்பது உண்டு .சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் ஹைக்கூ நன்று .

சிற்பியை
வணங்கியது
சிலை !

எந்த நோயும் இல்லாவிட்டாலும் தனக்கு நோய் இருப்பதாக அஞ்சி வாழும் மனிதர்கள் உண்டு .அவர்களுக்கான ஹைக்கூ .

நோயில்லை
மனதை உலுக்கியது
பயம் !

நிலவு வந்ததும் அல்லி மலரும் அறிந்து இருக்கிறோம் .பார்த்தும் இருக்கிறோம் .அதனை கவித்துவமாக உணர்த்தும் ஹைக்கூ

நிலவின் முத்தத்தில்
ஓசையின்றி விழித்தது
மலர் !

இந்த ஹைக்கூவில் மலர் என்பதற்குப் பதில் அல்லி என்றும் எழுதி இருக்கலாம் .

வாசிப்பது யாரென்றாலும் இசை தரும் புல்லாங்குழல் .நிறம் பார்ப்பதில்லை .குணம் பார்ப்பதில்லை. பாரபட்சம் பார்ப்பதில்லை. என்பதை விளக்கும் ஹைக்கூ .

நிறம் பற்றி கவலையின்றி
இசையாக்கியது புல்லாங்குழல்
காற்று !

ஜல்லிக்கட்டு நடக்கும் ஒவ்வொரு வருடமும் உயிர் பலியும், காயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன .ஜல்லிக்கட்டின் காரணமாகவே விதவையான பெண்கள் கிராமங்களில் நிறைய உள்ளனர் மனிதாபிமான அடிப்படையில் வடித்த ஹைக்கூ .

உயிர்வதை செய்து
உயிரிழக்கிறார்கள்
ஜல்லிக்கட்டு !

மனிதனில் எவனும் சாமி இல்லை என்பதை உணராமல் ஆசாமிகளை சாமி என்று சொல்லி ஏமாந்து பணம் கட்டி வருகின்றனர் .அவர்களோ சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் .கோடிகளை சேர்த்து விடுகின்றனர் . பெண்களிடம் தவறாக நடக்கின்றனர் . விழிப்புணர்வு விதைக்கும் ஹைக்கூ .

போதைமடம்
காவிக்குள் வழிகிறது
காமரசம் !

இயற்கையைக் காட்சிப் படுத்துதல் , முதல் இரண்டு வரிகளில் வியப்பு ஏற்படுத்தி மூன்றாம் வரியில் விடை சொல்லும் விதமாக எழுதுவது ஹைக்கூ வடிப்பதில் உள்ள யுத்திகள் .அந்த வகை ஹைக்கூ .

இனிக்கிறது
வேப்பங்காடு
குயிலோசை !

கேள்விப்பட்ட பொன்மொழிகளை மாற்றி எழுதுவது ஹைக்கூ வடிப்பதில் உள்ள ஒரு கலை .நிறைகுடம் தளும்பாது என்ற பொன்மொழியை மாற்றி சிந்தித்து வித்தியாசமான ஹைக்கூ வடித்துள்ளார் .நன்று .

நிறைகுடம்
பாறைக்குள் தளும்பியது
ஊற்று !

தீப்பெட்டியை காட்சிபடுத்தி அதன் மூலமாக சோம்பேறியாக இருக்கும் மனிதனுக்கு சுறுசுறுப்பை போதிக்கும் விதமான ஹைக்கூ .

உறங்கும் தீ
தீப்பெட்டிக்குள்
தீக்குச்சிகள் !

தோற்றத்தை , நிறத்தை வைத்து யாரையும் குறைவாக எண்ணுதல் தவறு என்பதை உணர்த்தும் ஹைக்கூ

அருவருப்பு அல்ல
உழைப்பின் நிறம்
கருப்பு !

நூலின் தலைப்பைத் தந்த ஹைக்கூ இதுதான் .மிக நன்று நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் . .

Please follow and like us:

You May Also Like

More From Author