என்ன சொல்லப் போகிறாய்.

Estimated read time 1 min read

Web team

r2.jpg

.
என்ன சொல்லப் போகிறாய்?

நூல் தொகுப்பாசிரியர் :

கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

TF2 வசந்த் பிருந்தாவன் குடியிருப்பு, 29/7, மதுரைசாமி மடம் தெரு, பெரம்பூர், சென்னை – 600 011. பக்கம் : 80. விலை : ரூ. 80

******

கவி ஓவியா என்ற மாத இதழின் ஆசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி அவர்கள், கோவை வசந்தவாசல் கவிமன்றம் போலவே திட்டமிட்டபடி திட்டமிட்ட நாளில் நூலை வெளிக்கொண்டு வந்து விடுகிறார். சொந்தமாக நூல் வெளியிட முடியாத வளரும் கவிஞர்களுக்கு தனது கவிதைகளை நூலில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறார், பாராட்டுக்கள்.

இந்நூலை இனிய நண்பர் கவிமாமணி திருவை பாபு அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருக்கிறார். இந்நூலில் மூத்த மரபுக் கவிஞர் கருமலை தமிழாழன் தொடங்கி அறிமுகக் கவிஞர் சாய்ஸ்ரீதர் வரை பலரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மரபுக்கவிதைகளும் உள்ளன. புதுக்கவிதைகளும் உள்ளன. என் கவிதையும் 19ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. பங்குபெற்ற அனைவருக்கும் அழகிய வண்ணத்தில் பாராட்டு சான்றிதழும் அனுப்பி உள்ளார்.

அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. பாராட்டுக்கள். தொகுப்பு நூல் வெளியிடுவதும் எளிதான பணி அன்று. பலருக்கும் அறிவிப்பு தந்து, கவிதைகள் பெற்று, புகைப்படம் முகவரியுடன் இடம்பெறச்செய்து நூலாக்குவது சிரமமான பணி. சிரமமான பணியினை சிரமேற்கொண்டு அரும்பணியாற்றி வருகிறார் பெரம்பூரில் வாழும் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி. பெரம்பூரில் வாழ்ந்து மறைந்த கவிப்பேரரசு அருமைநாதன் அவர்கள் போல கவிஞர்களை ஒருங்கிணைக்கும் பணியினை செவ்வனே செய்து தமிழன்னைக்கு கவிதை நூல் அணிகலன் பூட்டி வருகிறார், பாராட்டுக்கள்.

என்ன சொல்லப் போகிறாய்? என்ற தலைப்பிலேயே பெரும்பாலான கவிஞர்கள் கவிதைகள் வழங்கி உள்ளனர். ஒருசிலர் மட்டும் வேறு தலைப்புகளில் எழுதி உள்ளனர். தலைப்பைப் படித்ததும் கவிஞர்கள் அனைவருக்கும் மலரும் நினைவுகளை மலர்வித்தது. காதல் அலைவரிசையில் கவிதைகள் யாத்து உள்ளனர்.

கவிஞர் கோவிந்தராசன் பாலு !

பாங்குடன் சொல்லிடு பவளவாய்த் திறந்திடு
பறந்திட வானிலே பறவைகள் போலவே!

கவியரங்கங்களில் மரபுக்கவிதைகள் பாடி கைத்தட்டல்கள் பெறும் கவிஞரின் கவிதை முதல் கவிதையாக இடம்பெற்றுள்ளது.

காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதைகள் வடித்து உள்ளனர். வயதை மறந்து அறுபது அடைந்தவர்களும் வாலிபக் கவிதை வடித்துள்ளனர். பெரும்பாலான கவிஞர்களுக்கு காதல் கவிதையே முதல் கவிதையாக இருக்கும். என்ன சொல்லப் போகிறாய்? என்று தலைப்புத் தந்தவுடன் அவரவர் முதல் காதல் பற்றிய நினைவு வந்து கவிதைகளை மிக அழகாக வடித்துள்ளனர்.

பாவலர் பாராள்வோன் !

ஒரே முறைதான் பார்த்தேன்
உன் சிங்காரச் சின்ன இடை
கொடுத்து விட்டேன்
சீட்டுக்கட்டிற்கு விடை!

பெங்களூரில் வாழும் கவிஞர் இவர். நன்றாக கவியரங்கங்களில் கவிதை பாடியவர், விபத்தில் உரக்கப் பேசும் வாய்ப்பை இழந்து, சப்தமாக உரைக்கும் கருவியின் மூலம் கவியரங்கில் கவிதை பாடி வருபவர். காதல் வயப்பட்டதும் சீட்டு விளையாடும் கெட்ட பழக்கத்தை விட்டு விட்டு ஒழுக்கமாகும் காதலன் பற்றி கவிதை வடித்துள்ளார்.

எல்லோருடைய கவிதைகளும் சிறப்பாக உள்ளன. நூல் மதிப்புரையில் எல்லோருடைய கவிதைகளையும் மேற்கோள் காட்டிட இயலாது என்பதால் குறிப்பிடவில்லை.

கவிஞர் மதுரை க. பாண்டியன் !

கால் முட்டாளும் அரை முட்டாளும் சேர்ந்து
காணும் நம்மை முழு முட்டாளாக்கும்
காரியம் தான் சபைக்கு உதவாத காதல் என்பது.

மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கிற்கு மாதா மாதம் தானி வண்டியில் வந்து கவிதை பாடும் மூத்தக் கவிஞர் .இவர் ஒருவர் தான் காதலுக்கு கருப்புக் கொடி அசைத்து கவிதை எழுதி உள்ளார். மற்ற அனைவருமே பச்சைக் கொடி அசைத்தே எழுதி உள்ளனர்.

கவிஞர் ம. பிருந்தா

தேக்குமர தேகமழகா

யார் சொன்னது
நிலவைப் பெண்ணென்று /

அது உன் முகமல்லவா!

நிலவு பெண் அல்ல ; ஆண் என்று சொல்லி வித்தியாசமான கவிதை வடித்துள்ளார். பாராட்டுக்கள்.

கவிஞர் கனகா பாலன் !

இயற்கை அழித்து இல்லம் கட்டி

செயற்கை தயவில்
காலம் ஓட்டும்

மனித மா இனமே

தலைமுறை
கற்றிட நீ

என்ன சொல்லப் போகிறாய்?

சமுதாயத்திற்கு அறநெறிக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுக்கள். மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், பள்ளியின் முதல்வர்கள், ஆசிரியர்கள் இப்படி சமுதாயத்தில் உள்ள பலரும் கவிதைகள் எழுதி உள்ளனர் பாராட்டுக்கள்.

பாவலர் கருமலைத் தமிழாழன் !

ஏக்கங்கள் நான் காணும் கனவெல் லாமே
எதிர்பார்த்த படிவாழ்வில் நடப்ப தற்கும்
ஆக்கந்தான் வருவதற்கும் தளர்ச்சி யில்லா
அரும்முயற்சி நம்பிக்கை வேண்டும் நமக்கே!

தன்னம்பிக்கை என்பது மனிதனுக்கு அவசியம் வேண்டும். அது இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார், பாவலர் கருமலைத் தமிழாழன்பாராட்டுக்கள்.

பாவலர் பாட்டரசன் !

குடிக்கிறப் பழக்கம் இருக்கிற வரைக்கும்
குடும்பத்தில் நிம்மதி இருக்காது – உனக்கு
சமூக மரியாதைக் கிடைக்காது.

அரசாங்கமே மது விற்கும் அவலம், தமிழகத்தில் தான் அமோகமாக நடந்து வருகின்றது. குறியீடுகள் வைத்து விற்பனையைப் பெருக்கி மகிழ்கின்றனர். குடியின் கேட்டை உணர்த்தி வடித்த கவிதை நன்று.

முனைவர் நா. காயத்ரி !

நம்மால் முடியும்

என்று எண்ணுங்கள்
நமது உயரம் வானமாகும்

சும்மா இருப்பதே
சுகம் என்று இருந்தால்

ஓங்கும் வாழ்வு வீணாகும்!

சும்மா இருக்காதே! சுகம் காணாதே! உழைத்தால் உயர்வு வரும்! என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள். தொகுப்பாசிரியர் மயிலாடுதுறை இளையபாரதி அவர்கள் ‘திசையெங்கும் தீப்பொறி’ அடுத்த நூல் அறிவிப்பு தந்துள்ளார். தொடர்ந்து இயங்கி வரும் தொகுப்பாசிரியருக்கு பாராட்டுக்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author