கவித்தேன்.

Estimated read time 1 min read

Web team

IMG_20240325_081939.jpg

கவித்தேன்!
நூல் ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

தமிழ்மணி புத்தகப் பண்ணை, 281, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5. பக்கம் : 176, விலை : ரூ.200.

******

புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பொன்மொழிக்கு ஏற்ப பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் மூத்த பிள்ளை கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர். தந்தையின் வழியில் இன்றைய தலைமுறை நடை போடுவதில்லை. ஆனால் நூலாசிரியர் தமிழ்ப்பணி எனும் மாத இதழை தந்தையின் வழியில் நடத்தி வருகின்றவர். கவியரங்கில் கவிதை பாடி வருபவர். பல நாடுகளுக்கு பயணம் செய்பவர். கண்ட கேட்ட பாதித்த நிகழ்வுகளை மரபுக்கவிதையாக்கி கவிவிருந்து வைத்துள்ளார்.

‘கவித்தேன்’ நூலின் பெயர் காரணப்பெயர் என்றே சொல்லலாம். தேன் போன்ற கவிதைகளை வடித்து நூலாக்கி உள்ளார், பாராட்டுக்கள்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும், பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களும் அணிந்துரை நல்கி உள்ளனர். பேராசிரியர் சு. அழகேசன் அவர்கள் வாழ்த்துப்பா வழங்கி உள்ளார். கவிஞர் குடியாத்தம் குமணன் அவர்களும் வாழ்த்துக்கவி வடித்துள்ளார்.

உலக உன்னதம் என்ற பிரிவில் 13 கவிதைகளும், உரிமை முழக்கம் என்ற பிரிவில் 16 கவிதைகளும், உயர்ந்தோர் வணக்கம் என்ற பிரிவில் 15 கவிதைகளும், கவியரங்கக் கவிதைகள் என்ற பிரிவில் 3 கவிதைகளும் ஆக மொத்தம் 47 கவிதைகள் உள்ளன. கருத்துள்ள கவிதைகள் கனி போன்ற கவிதைகள்.

வளரும் கவிஞர்கள் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். சொற்களஞ்சியமாக கவிதைகள் உள்ளன. பாராட்டுக்கள்.

கொழும்பு!

ஈழத்துக் கொடுமை நசுக்கியதே
இனிய உறவோ உலகம் சிதறியதே!
வேழத்துத் தமிழர் வேதனைகள்
வேதனைக் கடலில் மூழ்கியதே
காலத்தின் கோலம் தள்ளியதால்

கருணையர் மக்கள் கண்டிடுதே
ஓலத்தைக் கண்டு திரும்பியதே

ஒய்யாரக் கொழும்பு நகரினிலே!

இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய கொடூரக் கொடுமை ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலை. ஈழம் குறித்த வேதனையை பல கவிதைகளில் வடித்துள்ளார். அய்நா மன்றத்தால், கொலைக்-குற்றவாளி இன்னும் தண்டிக்கப்படாதது உலகத் தமிழர்களுக்கு வேதனை!

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அடைக்கலம் தந்து போற்றி வரும் நாடு கனடா. கனடாவிற்கு தமிழுக்கும் உரிய மதிப்பை வழங்கி உள்ளனர். தமிழர்களையும், நன்கு மதித்து வருகின்றனர். கனடா சென்று சுற்றிப்பார்த்த நூலாசிரியர் கவிதையும் வடித்துள்ளார்.

கனடா சி.என். கோபுரம்! கனடாத் தமிழர்
உள்ளத்தினைக் / கலை உயர் கோபுரமே
மனமும் செயலும் ஒன்றிணைந்ததே / மாசிலா
லோகன் நட்புடனே / தினம் தினம் உதயன் பணிகளோடே /
திகழ்புகழ் கோபுரம் கண்டோமே. இனத்தின் மகாகவிப் பேரரசும்
இன்முகம் மகிழக் கண்டாராம்!

கனடாவில் உயரமான கோபுரத்திற்கு மின்தூக்கியில் உயரம் சென்று அங்குள்ல உணவகத்தில் உணவருந்தி வடித்த கவிதை நன்று. படிப்பவர்களுக்கும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்வண்ணம் எழுதி உள்ளார். பாராட்டுக்கள்.

மாநகர் தொடர் வண்டி!

உலகமெலாம் பறக்கும்போதே உரிமையான
மண்ணை எண்ணும் / தலமெலாம் காணும்
நட்பும் / தாய் மண்ணே காண விரும்பும் /
வளமுடனே இசுடாலின் கண்ட / வலுவான
சிங்காரச் சென்னை / பலமெனவே சென்னை
மண்ணில் / பயணித்து மகிழ்ந்து சென்றேன்.

சென்னை மாநகரில் மக்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் ஓடிடும் மாநகர் தொடர்வண்டியில் பயணித்தவர் அது பற்றியும் கவிதை வடித்துள்ளார்.

நசுக்கிடும் வேடம் ஏனோ?

ஏழைகள் திட்டம் கூட / ஏய்ப்பவர் காணும் சோகம்
கோழைகள் மக்கள் வந்தே / கொள்ளையர் வலையில்
வீழ்தல் / வேலைகள் இல்லாத் தன்மை / வேண்டிய
செயலைக் காண்க! / பாவையாம் காவிரி டெல்டா
பசுமைக்கு வழியைச் சொல்க!

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற கதையாக நடுவணரசு அய்நூறு ஆயிரம் செல்லாது என்று சொல்லி மக்களை அல்லல்படுத்தி வேலைவாய்ப்புகளை இல்லாமல் ஆக்கிய கொடுமைகள் கண்டு கொதித்து எழுந்து வடித்த கவிதை நன்று.

காவிரி நீரை மீட்க!

நீதியை மதிக்கா ஆட்சி / நந்நீர் அரசியல் காட்கி
வீதியில் தமிழர் காதல் / விதியெனக் கூறும் ஓலம்
சாதனைச் சூழ்ச்சி இதோ! மூடிய மூடிய காவிரி நீரீன்
சோதனை வெல்வோம் சேர்ந்தே / சரித்திர வெற்றி காண்போம்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதும் கர்னாடகம் உரிய நீரை வழங்காமல் பிடிவாதம் காட்டி அரசியல் செய்துவௌம் அவலத்தை கவிதையில் கட்டி உள்ளார்.

கீழடி நிலையைக் காண்க!

சங்ககாலம் செய்யும் சான்றைச் /
சரித்திரக் கீழடி மண்ணை / மங்கிடும் செயலாய் செய்யும்
மதிகீழோர் மமதை சாய்க / பொங்கிடும் வரலாறு
எல்லாம் / பொழுதெல்லாம் போற்றி வாழத்
தங்கிடும் / அறத்தைக் கண்டே! / தக்கதாய்
நிலையாயச் செய்க!

கீழடியில் முழுமையாக ஆய்வு செய்தால் உலகில் முதலில் தோன்றியவன் தமிழன் முதல் தமிழ்மொழி முதல் அரசன் தமிழரசன் என்பது உலகிற்கு வெட்ட வெளிச்சமாகி விடும் என்பதற்கு பயந்தே முழுமையாக ஆய்வு செய்யவிடாமல் தடுத்து வந்தனர். விரைவில் தடை நீங்கும். கீழடி பற்றியும் கவிதை வடித்த நூலாசிரியருக்கும் பாராட்டுக்கள்.

மதிபுகழோன் பெரியார் கொள்கை வெல்க!

ஆண்டாண்டு அடிமை வாழ்வை / அகற்றிடும் பெரியார்
வீரம் / தாண்டிட்ட காண்டம் இன்று / தந்திட்ட பெரியார்
வீறு / வேண்டியே துன்பம் ஏற்று / வேதமென்றே
மூடச் செயலை / மாண்டிடவே செய்த எங்கள்
மாப்புகழோன் பெரியார் நாதம்!

பகுத்தறிவுப் பகலவன் பற்றிய கவிதை மிக நன்று. புரட்சிக்கவிஞர், காரல் மார்க்சு, பிடல் காஸ்ட்ரோ போன்று ஆளுமைகள் பற்றியும் கவிதை வடித்துள்ளார். வில்லிசை வேந்தர் கட்டி ஆறுமுகம் பற்றியும் கவிதை உள்ளது. மொத்தத்தின் பல்சுவை விருந்தாக உள்ளது. பாராட்டுக்கள்.

நூலின் இறுதிப்பக்கங்களில் நூலாசிரியர் வா.மு.சே. திருவள்ளுவர் அவர்களின் வாழ்க்கைப் பயணம் குறிப்புகள் படித்து வியந்து போனேன். செயற்கரிய செயல்கள் செய்து செயல்வீரராகவும் விளங்குகின்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author